கடந்த ஆண்டு திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி பகுதியை சார்ந்த தாழ்த்தப்பட்ட வகுப்பை சார்ந்த பள்ளி மாணவனையும் அவரது தங்கையையும் வீடு புகுந்து சக மாணவர்கள் வெட்டிய சம்பவம் தமிழக முழுவதும் பேர்அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் நடைபெற்ற சில மாதங்களிலேயே திருநெல்வேலியில் பள்ளி மாணவர்களுடைய சாதி மோதலும் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் காயமடைந்த இரு மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வந்தனர். இது குறித்து தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிக்கை ஒன்றினை வெளியிட்டு இருந்தார், அந்த அறிக்கையில் அவர் தெரிவித்து இருப்பது “திருநெல்வேலி மாணவர்களிடையே சாதி கலவரத்தை தூண்டக்கூடிய அளவிற்கு ஏற்பட்ட மோதல் மிக மிக வன்மையாக கண்டிக்கத்தக்கது ஆகும். இது போன்ற நிகழ்வு அதே பள்ளிக்கூடத்தில் ஏற்கனவே நிகழ்ந்துள்ளது. இன்றைக்கு மாணவர்களிடையே காணப்படும் சாதி மோதல் என்பது தொடர்கதையாக மாறினால் அவர்களின் எதிர்காலமும், வருங்காலமும், சமுதாயமும் பாதிக்கக்கூடிய வகையில் அமையும்.
மாணவர்களுக்குள் எந்த பாகுபாடும் இருக்கக் கூடாது என்பதற்காக தான் ஒரே மாதிரியான சீருடைகள் வழங்கப்பட்டு வருகின்றது. ஆனால் எத்தனை மாற்றங்களை கொண்டு வந்தாலும் எத்தனை பாரதியார், பெரியார் வந்தாலும், சாதிகள் இல்லை என்று கூறினாலும், இந்த சாதி வெறி என்பது இளம் வயதிலேயே அதுவும் பள்ளிக்கூடங்களிலேயே தொடங்குவது எதிர்கால தமிழகத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக அமையும். எனவே தமிழக முதல்வர் உடனடியாக இதில் கவனம் செலுத்தி இரும்பு கரம் கொண்டு தடுக்க வேண்டும், என தேமுதிக சார்பாக கேட்டுக்கொள்கிறோம்”, என அவர் கூறியுள்ளார்.