
இன்றைய உலகம் ஃபாஸ்ட் ஃபுட் மயமாகிவிட்டது. எங்கு திரும்பினாலும் பாஸ்ட் புட் கடைகள் ஆக்கிரமித்து கொண்டிருக்கின்றன. பீசா,பர்கர்,சவர்மா,ப்ரைட் ரைஸ், நூடுல்ஸ், பானிபூரி என மக்கள் விரும்பி சாப்பிடும் உணவுகளின் பட்டியலில் இந்த உணவுகள் முதல் இடங்களை வகிக்கின்றன. ஆனால் இந்த வகை உணவுகள் உடம்பிற்கு எவ்வளவு கேடு விளைவிக்கும் என்பதை பெரும்பாலான மக்கள் அறிவதில்லை.
இளைஞர்கள் மத்தியில் இந்த ஃபாஸ்ட் ஃபுட் உணவுகள் மிகப் பிரபலம். நண்பர்களுடன் வெளியே சென்றால் உடனே ஒரு ஃபாஸ்ட் புட் கடையை தேடி சென்று நேரத்தை செலவிடுகின்றனர். இந்த தரமற்ற உணவுகள் ஸ்லோ பாய்சன் போல் நமது உடம்பை கெடுக்கும் என்பதை தெரிந்தும் இன்றைய இளைஞர்கள் பாஸ்போர்ட் மோகத்தால் அதன் பின்னாலே செல்கிறார்கள். மேலும் இது போன்ற ஃபாஸ்ட் ஃபுட் சாப்பிடுவதுதான் ஸ்டைல் மற்றும் ட்ரெண்ட் என்று நினைத்துக் கொள்வது தான் அவலத்தின் உச்சம்.
இந்த மாதிரி தரமற்ற உணவுகளை உண்டு நோய்வாய் படுபவர்கள் ஏராளம். இத்தகைய ஆரோக்கியமற்ற உணவில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்ள வேண்டியது அவசியம். கொரோனா காலகட்டத்திற்கு பிறகு பெரும்பாலான மக்கள் தங்களது உடல் நலனில் அக்கறை கொள்ள ஆரம்பித்து விட்டார்கள்.பாரம்பரிய உணவுகளை தேடிச்சென்று விரும்பி உன்னை ஆரம்பித்து விட்டார்கள். ஆனாலும் இந்த மகத்துவமான ஆரோக்கியமாய்ந்த சிறுதானிய உணவு வகைகளை பற்றிய விழிப்புணர்வு இளைஞர்கள் மத்தியில் இன்னும் தேவைப்படுகிறது.
உணவு தானியங்களில் அளவில் சிறியவைகள் தான் சிறுதானியங்கள் எனப்படும். ராகி, கம்பு, வரகு, சாமை, குதிரைவாலி, திணை, சோளம், பனிவரகு என சிறுதானியங்களில் பல வகைகள் உண்டு. இந்த வகை சிறு தானியங்களை தான் நம் முன்னோர்கள் அன்றாடம் சாப்பிட்டு நோய் நொடி இல்லாமல் வாழ்ந்து வந்துள்ளனர்.
இன்றைய காலகட்டத்தில் சர்க்கரை நோயாளிகள் அதிகம். அவர்களும், இரத்த கொழுப்பு மற்றும் பிற உடல் நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த சிறுதானிய உணவகங்களை தாராளமாக எடுத்துக் கொள்ளலாம். இந்த சிறுதானியங்களில் அளவற்ற சத்துகள் கொட்டி கிடக்கின்றன. வைட்டமின்கள், நார் சத்துக்கள், நோய் எதிர்ப்பு சக்தி, நீரழிவு நோயை கட்டுக்குள் வைப்பது,உடல் எடையை குறைப்பது, உடல் கொழுப்பை குறைப்பது, எலும்புகளுக்கு பலம், உடல் வலிமை, இரும்புச்சத்து, புரதம், இருதய பாதுகாப்பு, மூளை வளர்ச்சி என சிறுதானியங்களை அன்றாடம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளை சொல்லிக் கொண்டே போகலாம்.
தினமும் நாம் சாப்பிடும் மூன்று வேலை உணவுகளில் ஒரு வேலை மட்டுமாவது சிறுதானிய உணவுகளை கட்டாயம் எடுத்துக் கொண்டால் நம் உடல் ஆரோக்கியம் மேம்படும். தற்போது சிறுதானியங்களை கொண்டு வித விதமான புதுவிதமான ரெசிபிகள் வந்துள்ளது.திணை அரிசி பாயாசம், கோதுமை ரவை கிச்சடி, கருப்பு கவுனி அரிசி கஞ்சி, ராகி இட்லி, குதிரைவாலி அரிசி சாதம் என விதவிதமாக செய்து சாப்பிட பல தேர்வுகள் இருக்கிறது.
தற்போது இளம் வயது மரணங்கள் மாரடைப்பின் காரணமாக அதிகப்படியாக நடப்பதை நாம் பார்க்கிறோம். இதற்கு நம்முடைய மோசமான உணவு பழக்க வழக்கங்கள் தான் காரணம் என ஆராய்ச்சிகள் கூறுகிறது. இனியாவது உடல் நலனில் அக்கறை கொண்டு நம் பாரம்பரிய உணவு முறைக்கு மாறினால் மட்டுமே நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும். ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு மாறி, இனி வரும் சந்ததியினரையும் பாஸ்ட் புட் உலகத்தில் இருந்து காப்பாற்றி பாரம்பரியமான உணவு வகைகளை சாப்பிட பழக்கப்படுத்துவோம் கற்றுக் கொடுப்போம்.