பாம்பு கடித்ததால் மனிதர்கள் உயிரிழப்பதும், கடித்த பாம்புடன் மருத்துவமனைக்கு அழைத்து வருவது என்பது வழக்கமான ஒன்று. ஆனால் இதற்கு மாறாக பீகாரில் ஓர் அதிர்ச்சி சம்பவம் ஒன்று அரங்கேறி உள்ளது. அது குறித்து விரிவாக இப்பதிவில் காண்போம்.
பீகார் மாநிலத்தில் உள்ள நவாடா மாவட்டத்தை சார்ந்தவர் சந்தோஷ் லோஹர். கூலி தொழிலாளி. இவர் வேலையை முடித்துவிட்டு ரயில் தண்டவாளம் அருகே உள்ள குடிசையில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்பொழுது விஷப் பாம்பு ஒன்று அவரை கடித்து உள்ளது. உடனே சந்தோஷிற்கு அந்த பாம்பை திருப்பிக் கடித்தால் தனது உடலில் உள்ள விஷம் ஒன்றும் செய்யாது என்ற மூடநம்பிக்கை இருந்துள்ளது.
அதன் அடிப்படையில் சந்தோஷ் தன்னை கடித்த பாம்பை பிடித்து மூன்று முறை கடித்துள்ளார். இதில் அந்த விஷப்பாம்பு சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தது, இதனை தொடர்ந்து அங்கு இருந்தவர்கள் சந்தோஷ் லோஹாரை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். சிகிச்சை அளித்த பிறகு உடல் நலம் தேறி மறுநாள் மகிழ்ச்சியாக வீடு திரும்பியுள்ளார்.