இந்து மதத்தில் பிரம்ம முகூர்த்த வேலை மிக சிறப்பானதாக கருதப்படுகிறது. அதிகாலை 3 மணியிலிருந்து 6 மணி வரை நிகழும் நேரத்தையே பிரம்ம முகூர்த்தம் என்று அழைப்பார்கள். யோகா, தியானம், பூஜை ஹோமம், போன்றவைகளை செய்வதற்கு பிரம்மமுகூர்த்த வேலை சிறப்பானதாகும்.
பிரம்ம முகூர்த்த வேலையில் கடவுள் வழிபாட்டை மேற்கொள்வது பல மடங்கு நன்மைகளையும் புண்ணியத்தையும் நமக்குத் தரும் என்பது நம்பிக்கை. தொழில் தொடங்குதல், கணபதி ஹோமம், கிரகப்பிரவேசம், திருமணம் என எந்த ஒரு காரியத்தையும் பிரம்ம முகூர்த்தத்தில் செய்தால் நிச்சயம் வெற்றி கிடைக்கும்.
சூரியன் உதிப்பதற்கு முன்புள்ள அதிகாலைப்பொழுதை உஷத் காலம் என்பர் இந்த சமயத்தில்தான் தேவர்கள், தேவதைகள், சிவன், பார்வதி, மகாலட்சுமி, விஷ்ணு, ரிஷிகள், முனிவர்கள் போன்ற தெய்வங்கள் வான் மண்டலத்தில் சஞ்சரிப்பதாக ஐதீகம். அந்நேரத்தில் நம் கண்விழித்து நாம் செய்யும் பிரார்த்தனைகள் அனைத்திற்கும் உடனடியாக பலன் கிடைக்கும் வீட்டில் சகல ஐஸ்வர்யங்களும் பெருகும் என சாஸ்திர ரீதியாக கூறப்படுகிறது.
அதுவும் பிரம்ம முகூர்த்த நேரத்தில் விளக்கேற்றி வழிபடுவது மிகவும் விசேஷ பலன்களை தரும் கிரக தோஷம், ராகு கேது தோஷம், களத்திர தோஷம், போன்ற தோஷ பாதிப்பு உள்ளவர்கள் பிரம்ம முகூர்த்த நேரத்தில் திருமணம் செய்து கொண்டால் தோஷ நிவர்த்தி அடைந்து அவர்களின் வாழ்க்கை சிறந்து விளங்கும் என சாஸ்திரம் கூறுகிறது.
பிரம்ம முகூர்த்தம் என்பது பிரம்மா எனப்படும் நான்முகனை குறிக்கின்றது. படைக்கும் தொழில் புரியும் பிரம்மன் தன்னுடைய நாவில் சரஸ்வதியை அமரச் செய்து 24 கலைகளையும் மனிதர்களையும் இந்த பிரம்ம முகூர்த்த வேலையில் தான் படைப்பார் என்று கூறப்படுகிறது. இந்த பிரம்ம முகூர்த்த வேலைக்கு நல்ல நேரம், திதி, வாரம், நட்சத்திரம், யோகம், தோஷங்கள், போன்றவைகள் கிடையாது. இந்த நேரம் எப்போதுமே சுப வேளை தான் எனவே தான் பிரம்ம முகூர்த்தத்தில் திருமணம், தொழில் தொடங்குதல் மற்றும் வீடு கிரகப்பிரவேசம் செய்வது சிறப்பாக கருதப்படுகிறது.
அறிவியல் ரீதியாக பார்த்தாலும் பிரம்ம முகூர்த்த வேலையில் சுத்தமான காற்று வான்வளிமண்டலத்தில் கிடைக்கும். அதனால் பிரம்மமுகூர்த்த வேலையில் எழுந்து, குளித்து, நடைப்பயிற்சி மேற்கொள்வது, தியானம், யோகா போன்றவை செய்வது நம் உடலிற்கு நன்மையை தருவதோடு, பலவித நோய்களில் இருந்து பாதுகாத்து ஆரோக்கியமான வாழ்விற்கு வழிவகுக்கும்.