
தற்பொழுது பாராளுமன்றத்தில் மக்களவை மற்றும் மாநிலங்கள் அவை என இரண்டு கூட்டத்தொடர்களும் நடைபெற்று வருகின்றது. அதில் தற்பொழுது இரு அவைகளிலும் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது அவை உறுப்பினர்கள் பேசி வருகின்றனர்.
அந்த வகையில் மாநிலங்களவையில் பிரதமர் மோடி குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது உரையாற்றியுள்ளார். அப்பொழுது அவர் “விவசாயிகளுக்கு இதுவரை எந்த ஒரு அரசும் செய்யாத ஒரு திட்டத்தை பாஜக அரசு செய்துள்ளது. நிலத்திலிருந்து சந்தைக்கு செல்வது வரை விவசாயிகளுக்கு நாங்கள் துணையாய் நிற்கின்றோம்.
வேளாண் பொருள்களுக்கான MSP -யை நாங்கள் உயர்த்தி உள்ளோம். காங்கிரஸ் விவசாயிகளை எப்படி தவறாக வழி நடத்தியது என்பதை நாடே அறியும். மேலும் பொது போக்குவரத்தில் நாடு முழுவதும் மிகப் பெரிய அளவில் மாற்றங்களை கொண்டு வருவோம். நாட்டில் உள்ள இரண்டு மற்றும் மூன்றாம் கட்ட நகரங்களை மேம்படுத்துவதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வோம்”, என்று பிரதமர் மோடி பேசி உள்ளார்.
இதனை தொடர்ந்து மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பிரதமர் மோடிக்கு பதில் அளிக்க சபாநாயகர் இடம் அனுமதி கோரி உள்ளார். ஆனால் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மாநிலங்களவைக்கு பிரதமர் மோடி தவறான தகவல்களை வழங்குகிறார் என்று கூறி காங்கிரஸ் தலைமையில் அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களும் வெளிநடப்பு செய்துள்ளனர்.