யாமிருக்க பயமேன்..!! கண்டிப்பாக அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு முக்கியமான பதிவு..!!

Oplus_131072

“யாமிருக்க பயமேன்?”

“என்னாச்சு உன் மவளுக்கு? உன் புடவை முந்தானைக்குள்ளே ஒளிஞ்சிகிட்டுருக்கா?”என்று என்று கேட்டபடி வந்த மூர்த்தி, பின் அங்கே அம்மாவின் முந்தானையை பாதுகாப்பு கவசமாய் தன் மேல் சுற்றி கொண்டிருந்த 14 வயது மகள் யமுனாவை ஏறிட்டு பார்த்து சிரித்தார்.

மூர்த்தியின் மனைவி ஈஸ்வரி அவரை பார்த்து,
”ஏங்க! எதுக்கு இப்படி சிரிக்கிறீங்க? உங்களுக்கு தெரியாதா நம்ம யமுனாவின் பயத்தை பற்றி? பள்ளிக்கூடத்தில் இருந்து , அவளை வீட்டுக்கு கொஞ்சம் கூட மனிதாபிமானம் இல்லாம நடந்தே வர சொல்றீங்களே, அங்க தான் ஆரம்பிக்குது அவளோட பிரச்சனையே. அவளுக்கு ஸ்கூல் பஸ் அல்லது ஆட்டோ ஏற்பாடு பண்ணி தர உங்களால முடியாதா?”.என்று வழக்கறிஞரை போல் மகளுக்காக வாதத்தில் ஈடுபட்டாள் அம்மா ஈஸ்வரி

நிரம்பி வழிந்த கண்ணீருடன் மகளோ தன் தந்தையை பார்த்து “அப்பா! தினமும் என்னை யாரோ பின் தொடர்ந்து நடந்து வராங்கப்பா.. எனக்கு ரொம்ப பயமா இருக்கு” என்று சொல்ல
“உனக்கு எதுக்கு தான்டா பயம் இல்லை ?. உன் பயத்தை தூக்கி குப்பைத் தொட்டியில் போடு. உன் அம்மா உனக்கு போதித்ததெல்லாம் எதற்கெடுத்தாலும் ‘நீ ஒரு பொம்பள புள்ள.. அதை செய்யாதே ..இதை செய்யாதே “என்று சொல்லியே உன் வீரத்தை முளையிலேயே கிள்ளி எறிஞ்சுட்டா. என் செல்லக்குட்டியே!நீ ஒரு ஆண் பிள்ளைக்கு நிகரடா! உன்னை தொடர்ந்து வருபவர் யாராக இருந்தாலும் எதிர்த்து போராட கற்றுக்கொள்”சொல்லி விட்டு அறைக்குள் சென்றார். அவரை பின்தொடர்ந்தாள் ஈஸ்வரி

“ஏங்க இது என்ன பைத்தியக்காரத்தனம் ?புத்திமதி தான் இதற்கு தீர்வா? பின் தொடர்பவன் யாரென்று தெரிந்து கொள்ள வேண்டாமா? என்று ஈஸ்வரி கோபமாய் கத்த “இத கேளடி ஈசு!அப்படி ஒருவருமே இல்லை என்பதுதான் எனக்குத் தெரிந்த உண்மை ..அவளது பயம் தேவையற்ற கற்பனைகளை அவளுக்குள் வளர்க்கின்றது. இப்படியே அவளை விட்டால் நாளடைவில் இந்த பயம் அவளை ஒரு மன நோயாளி ஆக்கிவிடும் தெரிந்துக் கொள்”.. என பதிலுக்கு பாய்ந்தான் மூர்த்தி

ஓவென அழுத ஈஸ்வரி” “ ஏங்க!அவளது பயத்தை தெளிய வைக்க கோவிலில் வேப்பிலை அடித்து விபூதி போட்டேன்.சர்ச்சுக்கு அழைத்து சென்று பாதிரியாரிடம் அவளுக்காக பூசை செய்ய செய்தேன். மசூதிக்கு அழைத்து சென்று மந்திரிக்க வைத்தேன். இதைவிட ஒரு அம்மா என்ன செய்ய முடியும்? சொல்லுங்க ‘ என்று வார்த்தைகளை வெடியென வெடித்து சிதற விட்டாள்

பதறிப்போனார் மூர்த்தி “அடிப்பாவி ! அப்படி எல்லாம் என் பொண்ண கஷ்டப்படுத்தினியா?
உனக்குத்தான் இவை அனைத்துமே தேவை.என் மகளுக்கு அல்ல. ஆமாண்டி.. அவ சின்ன வயசுல சொன்னது கேக்க மாட்டேங்கிறானு பேய் பிசாசு கதைகளை சொல்லி பயமுறுத்தி அவளுக்குள்ளே மூடநம்பிக்கைகளை வளர்த்தது நீதானே.. மகளிடம் அக்கறை கொண்ட நீ அவளை நல்ல மனோதத்துவ டாக்டரிடம் அழைத்து சென்றிருந்தால் நான் உன்னை பாராட்டி இருப்பேன்..இன்னைக்கு பெருசா பேச வந்துட்டா. போதும்டி.. இந்த விஷயத்தை இத்தோட விட்டுடு .இனி நான் பார்த்துக்கிறேன் “கோபமாக சொல்லிவிட்டு அறையின் கதவை அடித்து சாத்தினார் மூர்த்தி.

14 வயதிலும் பாத்ரூம் போகக்கூட தாயை துணைக்கு அழைத்து செல்லும் மகளை நினைத்து வேதனை பட்டார் மூர்த்தி.. சிறு வயது முதல் பயம் என்னும் நஞ்சினை மகளுக்கு சிறிது சிறிதாக ஊட்டிவிட்ட ஈஸ்வரியின் மேல் கோபம்தான் அதிகமானது மூர்த்திக்கு

சில நாட்களுக்கு பிறகு தந்தையை தேடி ஓடி வந்தாள் மகள் யமுனா .”அப்பா ! ஸ்கூல்ல எல்லாரும் சுற்றுலா போறாங்க.. அம்மா என்ன ஆம்பள பசங்களும் கூட வருவாங்க நீ போக வேணாம்னு சொல்றாங்கப்பா! நீங்க என்ன சொல்றீங்க? என்று தயக்கத்துடன் கேட்க,“ இதென்ன கேள்வி?சந்தோஷமா போயிட்டு வாடா ராசாத்தி” என்றார் அப்பா.

அப்பாவை கட்டி பிடித்து முத்தம் தந்த யமுனா
”அப்பா! நாங்கள் அங்கிருந்து திரும்பி வருவதற்கு இரவு வெகு நேரமாகும் .நீங்கள் வந்து பள்ளியிலிருந்து இரவு என்னை அழைத்து வந்து விடுகிறீர்களா? என கேட்க, “நிச்சயமாகடா..அதை விட உன் அப்பனுக்கு என்ன வேலை? யாமிருக்க பயமேன்? “ என்று கெஞ்சலாக கேட்ட மகளுக்கு கொஞ்சலாக பதில் சொன்னார் மூர்த்தி. மகிழ்ச்சியில் துள்ளி குதித்தாள் யமுனா

பள்ளி வளாகம் .. அன்று சுற்றுலா சென்று திரும்பிய பிள்ளைகளை அழைத்துச் செல்ல வரிசையாக படையெடுத்து வந்தனர் பெற்றோர்கள்.. என்ன ஒரு ஏமாற்றம்! அங்கு யமுனாவின் தந்தை மட்டும் தான் வரவில்லை.
“ பாப்பா! உங்க அப்பா உன்ன மறந்துட்டாரு போல இருக்கு .. நான் வேணா உன்னை உங்க வீட்ல கொண்டு போய் விடவா ?” என்று கேட்ட பள்ளி வாட்ச்மேனை பார்க்கும் பொழுது சந்தேகத்துடன் பயமும் எழ சட்டென அங்கிருந்து வெளியேறி தந்தைக்கு போன் செய்ய ஆரம்பித்தாள்.

“மன்னிச்சுடுடா கண்ணு! நண்பர் வீட்டில் ஒரு துக்க நிகழ்ச்சி .எங்களால் கிளம்பி வர முடியாத சூழ்நிலை .நீயே வீட்டுக்கு புறப்பட்டு வா “என்று சாதாரணமாக பதில் சொன்னார் அப்பா. அந்த இரவு நேரத்தில் இப்படி ஒரு பதிலை எதிர்பார்க்காத யமுனா பயத்தில் அவ்விடத்திலேயே பனியென உறைந்தாள். இருட்டில் தனியாக நிற்பதை விட நடப்பதே மேல் என , நொடி பொழுதில் மனதில் தோன்ற , தெருவில் வேகமாக நடக்க ஆரம்பித்தாள்.
மூர்த்தியின் கைப்பேசி யமுனாவின் அழைப்பால் மீண்டும் மீண்டும் சிணுங்க ஆரம்பித்தது .. வீட்டில் இருந்து கொண்டே இது என்ன மகளுடன் விபரீத விளையாட்டு? என அம்மா தவித்தாள்.. ஒரு மகளின் வாழ்க்கையில் அப்பாவின் பொறுப்பு எவ்வளவு முக்கியமானது என்பதை உணர்ந்த மூர்த்தி சற்றும் அசரவில்லை…

“அப்பா! தெருவில் நிற்கும் நாலு பசங்க என்னை பார்த்து கிண்டல் செய்றாங்க.பயமா இருக்குப்பா” என்று மகள் நடுக்கத்துடன் அப்பாவிடம் சொல்ல, அப்பாவோ அவளிடம் “பயத்தை வெளியில் காட்டாதே.! உன் பயமே உன்னை கொன்று விடும். உன்னையும் அவர்களைப் போல் ஒரு ஆண் பிள்ளையாக நினைத்துக் கொண்டு அவர்களை முறைத்து பார்”.என்றார். இவளது நிமிர்ந்த பார்வையில் அவர்களின் தலை குனிந்தது .

சற்று நேரத்திற்கு பின் தன்னை யாரோ தொடர்வது போல் சத்தம் கேட்கவே சட்டென திரும்பிப் பார்த்த யமுனா .. பின் தொடர்பவர் எவரும் இல்லை வெறும் பிரமை என்பதை முதன்முதலாக உணர்ந்தாள்.
கயிறையும் பாம்பு என நினைத்து நடுங்கும் தனக்கு எங்கிருந்து வந்தது இத்தனை தைரியம்? தந்தை தந்த தைரியம் வேலாகி கையில் நின்றதோ? இதோ எதிரே அப்பா நடந்து வர,
இப்பொழுது அப்பாவை பார்த்ததும் ஓடிப் போய் அவரை அணைத்துக் கொண்டாள் வெறும் பயத்தால் அல்ல ,ஒரு சிங்க பெண்ணாய்…!

Read Previous

நீட் தேர்வில் மோசடி..!! புதிய நடவடிக்கை எடுத்த NTA..!!

Read Next

உங்கள் குழந்தைகளுக்கு காய்கறியை கொடுக்க சரியான வழி இதோ..!! வெஜிடபிள் சப்பாத்தி செய்முறை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular