
சென்னையில் உள்ள பட்டினப்பாக்கத்தில் பங்கு சந்தை வர்த்தகரின் வீட்டில் சுமார் 2 கோடி ரூபாய் மதிப்பில் மதிப்புடைய தங்க நகை திருடிய வழக்கில் அந்த வீட்டின் முன்னாள் கார் ஓட்டுநர் தற்பொழுது கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை எம்ஜிஆர் நகர் சத்யதேவ் அவன்யூவில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் கோபாலகிருஷ்ணன். இவர் ஷேர் மார்கெட்டில் ஈடுபட்டு வருகிறார். இவரது வீட்டில் சரவணன் என்பவர் கடந்த 10 ஆண்டுகளாகவே கார் ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். அவர் மீது கோபாலகிருஷ்ணன் அதிக நம்பிக்கை வைத்ததாக தெரிய வருகிறது. இந்நிலையில் சரவணன் செயல்பாடுகள் சரியில்லாத காரணத்தால் கடந்த 27ஆம் தேதி அவரை பணியிலிருந்து கோபாலகிருஷ்ணன் நீக்கி உள்ளார் .
பின் கோபாலகிருஷ்ணன் வீட்டில் உள்ள லாக்கர் சாவியை தேடி பார்த்த போது அந்த சாவி காணாமல் போய் உள்ளது. இதனை தொடர்ந்து வீட்டின் லாக்கரை உடைத்து பார்த்ததில் அதிலிருந்து 250 பவுன் நகை, வெள்ளி பொருட்கள் ரூ.25 லட்சம் ரூபாய் ரொக்கம் ஆகியவை திருடு போயிருந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த கோபாலகிருஷ்ணன் பட்டினம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.புகாரை பதிவு செய்த காவல்துறையினர் வீட்டில் முன்னால் கார் ஓட்டுனர் சரவணன் என்பவரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.