தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 100 புதிய முதல்வர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக கல்லூரி கல்வி ஆணையரகம் தெரிவித்துள்ளது.
அரசு கல்லூரிகளில் நீண்ட காலமாக நிரந்தர முதல்வர்கள் இல்லாமல் நிர்வாகம் நடைபெற்று வருவது குறித்து பல்வேறு தரப்பில் கவலைகள் எழுந்த நிலையில், இந்த புதிய நியமன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதனிடையே, அரசு கல்லூரிகளில் பணியாற்றி வரும் 129 முதல்வர்கள் பொது மாறுதல் கலந்தாய்வில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கலந்தாய்வு மூலம் தகுதியான முதல்வர்களுக்கு பணியிட மாற்றம் வழங்கப்பட உள்ளது.
பொது மாறுதல் கலந்தாய்வில் பங்கேற்க விரும்பும் முதல்வர்கள் இன்று முதல் நாளை மாலை வரை விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என கல்லூரி கல்வி ஆணையரகம் அறிவுறுத்தியுள்ளது.
அரசு கல்லூரிகளின் நிர்வாக செயல்பாடுகளை மேம்படுத்தவும், கல்லூரிகளில் தலைமை பொறுப்புகளை முறையாக நிரப்பவும் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நிரந்தர முதல்வர்கள் இல்லாமல் செயல்பட்டு வரும் கல்லூரிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில், புதிய முதல்வர்கள் நியமனம் மற்றும் பொது மாறுதல் கலந்தாய்வு முக்கியத்துவம் பெற்றுள்ளது.




