தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மற்ற மாநிலங்களில் இருந்து சொந்த ஊர்களுக்கு வர பொதுமக்கள் படையெடுத்துள்ளனர். மேலும், சென்னை, பெங்களூர் உட்பட ஒரு சில நகரங்களில் வேலைபார்த்து வரும் ஊழியர்கள் மிக முக்கிய பண்டிகையின் போது குடும்பங்களோடு சேர்ந்து கொண்டாட விடுமுறை நாட்களில் சொந்த ஊர்களுக்கு வருகை தருவது உண்டு. அந்த வகையில், நாளை(14.01.2025) கொண்டாடவிருக்கும் பொங்கல் திருநாளுக்கு கடந்த ஜனவரி 10 தேதி முதலே பேருந்து நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோத தொடங்கியது.
அதனை தொடர்ந்து, கடந்த 3 நாட்களில் இயக்கப்பட்ட அரசு மற்றும் தனியார் பேருந்துகளை பயன்படுத்தி எத்தனை லட்ச மக்கள் சொந்த ஊர்களுக்கு வந்துள்ளார்கள் என்பதை இப்பதிவில் காண்போம். சென்னையில் இருந்து இயக்கப்படும் 11,463 சிறப்பு பேருந்துகளில் இருந்து கடந்த 3 நாட்களில் மட்டுமே 60,40,465 பேர் பயணம் செய்துள்ளதாக அரசு போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. அதேபோல், தனியார் ஆம்னி பேருந்துகளில் 1,90,000 பேர் பயணம் செய்துள்ளார்கள் என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.




