இந்திய கிரிக்கெட் அணியில் வீரர்களின் உடல்தகுதி தொடர்பான பிரச்சனை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது கிரிக்கெட் வட்டாரத்தில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
மைதானத்தில் அணியின் செயல்பாடு எதிர்பார்த்த அளவில் இல்லாத நிலையில், தற்போது முக்கிய வீரர்கள் பலர் காயம் காரணமாக அவதிப்பட்டு வருகின்றனர். அணியின் முன்னணி வீரர்கள் உட்பட 6-க்கும் மேற்பட்ட வீரர்கள் உடல்தகுதி சிக்கலில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பெங்களூருவில் உள்ள பிசிசிஐ-யின் சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் மையத்தில், இந்திய அணி மற்றும் உள்நாட்டு போட்டிகளில் விளையாடும் வீரர்கள் உடல்தகுதி பரிசோதனை மற்றும் சிகிச்சைக்காக வரவுள்ளதாக கூறப்படுகிறது. ஹர்திக் பாண்டியா, நிதிஷ் குமார் ரெட்டி உள்ளிட்ட வீரர்கள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
மேலும், இங்கிலாந்து தொடரின் போது காயமடைந்த வருண் சக்கரவர்த்தி, ஹர்ஷித் ராணா, ஏற்கனவே சிகிச்சை பெற்று வரும் ஆகாஷ் தீப் மற்றும் வாஷிங்டன் சுந்தர் உள்ளிட்ட வீரர்களும் உடல்தகுதி கண்காணிப்பில் உள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில், சில வீரர்கள் முழுமையாக குணமடைவதற்கு முன்பே அணியில் சேர்க்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக ஹர்ஷித் ராணா மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோரின் உடல்தகுதி குறித்து கேள்விகள் எழுந்துள்ளன.
வீரர்களின் உடல்தகுதி குறைபாடு காரணமாக இந்திய அணியின் ஃபீல்டிங் தரமும் பாதிக்கப்பட்டுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. எளிதான கேட்சுகளை தவறவிடுவது மற்றும் மைதானத்தில் சுறுசுறுப்பு குறைவது அணியின் செயல்பாட்டை பாதிப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
பிசிசிஐ-யின் வீரர் தேர்வு மற்றும் காயம் மேலாண்மை முறைகள் குறித்து சமூக வலைதளங்களில் ரசிகர்கள் அதிருப்தி தெரிவித்து வரும் நிலையில், வீரர்களின் முழுமையான உடல்தகுதியை உறுதி செய்த பின்னரே அணியில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.




