இரவு தூக்கத்தில் கால் நரம்புகள் தீடீரென்று இழுக்கின்றது? இதற்கு தீர்வு என்ன?
தூக்கத்தில் கால்களில் தசை பிடிப்பு (Calf muscle cramps) ஏற்படுவதற்கு பல காரணங்கள் இருக்கலாம்…
நாள் முழுக்க அதிகம் நடப்பது, ஓடுவது அல்லது நிறைய நிற்பது போன்ற காரணங்களால் தசைகள் சோர்ந்து போகும். இரவில் திடீரென பிடித்துக் கொள்ளும்…கால்களை நீண்ட நேரம் ஒரே நிலையில் வைத்து தூங்கினால் இரத்த ஓட்டம் குறையும் – இதுவும் பிடிப்பு ஏற்படுத்தும்.
சிறிதும் கால்கள் அசையாமல் அமர்ந்து வேலை செய்வது .. பயணம் செய்வது கூட இரவில் தசைப்பிடிப்பை ஏற்படுத்தலாம்..போதிய அளவு தண்ணீர் குடிக்காதது, பொட்டாசியம் ஊட்டச்சத்து குறைபாடு போன்றவை காரணங்களாக சொல்லப்படுகிறது..
ஆனால் பெரும்பாலும் இது போன்ற தசைப்பிடிப்பு தூங்கும் போது வருகிறதே ஏன் என்று கேட்டால்..( என் அனுபவத்தில் சிந்தனைக்கு எட்டிய ஒன்றைச் சொல்கிறேன்)
சிறுவயதில் தூங்கும் வேளையில் நம் அருகில் படுத்திருக்கும் சகோதரனிடம் (தூக்கத்தில்)எத்தனை அடி, உதை வாங்கியிருப்போம் அல்லது அவனுக்கு கொடுத்திருப்போம்… இதை நான் ஏன் சொல்கிறேன் என்றால்.. தூங்கும் போது ஒருவர் அசைவின்றி அமைதியாக இருப்பதுபோல் தெரிந்தாலும் சில நேரங்களில் தூக்கத்தில் அவரது செயல்கள் வேகமாகவும், அழுத்தமாகவும், பதற்றமாகவும் இருக்கும்.. ஆங்கிலத்தில் இதை Sleep Movement Intensity (தூக்கத்தில் அசைவுகள் அதிகப்படியானது) என்று சொல்வார்கள்..தூக்கத்தில் ஒருவரின் அசைவுகள் சில சமயம் jerky & forceful ஆக இருக்கும்.
உதாரணமாக ஒருவர் தூக்கத்தில் தன்னை சொறிந்து கொள்கிறார் என்றால் அது சற்று அழுத்தமானதாக இருக்கும் காலையில் பார்க்கும் போது சிறிய நகக் கீறல்கள் கூட இருக்கலாம்.. காரணம் தூக்கத்தில் இயல்பைவிட அதிகமான செயல்பாடு..
அதே போல .. நாளெல்லாம் வேலை செய்து தசைகள் சோர்வடைந்த நிலையில்.. இரவு நீண்ட நேரம் காலை மடக்கி தூங்கும் ஒருவர் திடீரென வேகமாக கால்களின் விரலை அதிகபட்சமாக மடக்கவோ நீட்டவோ செய்கிறார் அதனால் அவர் காலின் தசைகள் சுருங்கி calf muscle cramps எனும் தசைப்பிடிப்பு ஏற்படுகிறது.. இயல்பாய் இருப்பதைவிட தூக்கத்தில் சில நேரங்களில் நமது செயல்கள் வேகமாகவும் அழுத்தமாகவும் இருப்பதே இதற்கு காரணம் (இருக்கலாம் ..இது என்னுடைய தனிப்பட்ட கருத்தே)..
இதே தசை சுருக்கம் விழித்திருக்கும் நேரத்திலும் நடக்கும். ஆனால் நாம் விழித்திருக்கும்போது உடலின் நிலையை உடனே மாற்றிக் கொள்வோம்.. அதனால் அந்த சுருக்கம் மெல்லியதாகி விடும் ஆனால் தூக்கத்தில் உடனே நிலையை மாற்ற முடியாததால், அந்த சுருக்கம் முழுவதும் செயல்பட்டு தசை பிடிப்பு மிகவும் கடுமையாக உணரப்படுகிறது..
முதல் படம் – கால் தசை இயல்பான நிலையில் அமைதியாக இருக்கிறது.
இரண்டாவது படம் -கால் வளைந்த போது ( தூக்கத்தில் கால்களை வேகமாக முன் தள்ளியபோது) தசை சுருங்குகிறது.
மூன்றாவது படம் – தசை சுருங்கிய பிறகு விடாமல் இருக்கும்.. அதனால்தான் வலி ஏற்படுகிறது..
எப்போதாவது தோன்றும் இதுபோன்ற தசைப்பிடிப்பு மிகக்கடுமையான வலியை ஏற்படுத்தும்..
பாதிப்பு சில நொடிகள் அல்லது சில நிமிடங்கள் வரை நீடிக்கலாம்.. உடனடி தீர்வு..
அவ்வேளையில் காலை அசைக்காமல் வைத்தால் சில நொடிகளில் அதுவாகவே சரியாகிவிடும்..பிடிப்பு நீடிக்கிறது என்றால் ..பாதத்தை நேராக வைத்துக் கொண்டு கால் விரல்களை மெதுவாக உங்களை நோக்கி இழுக்கவும் (இரண்டாவது படத்தில் இருப்பதற்கு எதிர்திசையில்).. இது தசையை நீட்டி பிடிப்பை நீக்குகிறது.. பிடிப்பு நீங்கிய பின்னும் வலி இருந்தால் சுடுநீர் ஒத்தடம் கொடுப்பது வலி நிவாரண தைலம் போன்றவை பலன் தரும்..
நிரந்திர தீர்வு என்பது நூறு சதவீதம் இல்லை என்றாலும்..தினமும் போதிய அளவு தண்ணீர் குடிப்பதும்.. அடிக்கடி இளநீர் அருந்துவதும் ..Potassium, Magnesium உள்ள உணவுகள் (வாழைப்பழம், nuts) சேர்ப்பதும் பலனைத் தரும்.
தசைப்பிடிப்பு அடிக்கடி வருகிறது என்றால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவதே சிறந்தது.




