மேற்கு வங்காளத்தின் பாக்டோக்ரா பகுதியில் கள்ளக்காதல் விவகாரம் காரணமாக பீகாரைச் சேர்ந்த மந்திரிவாதி ஒருவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு, அவரது தலை துண்டிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம் கிஷன்கஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்த இமாம் குவா என்பவர், தனது மனைவி மோமினா பேகத்தின் கள்ளக்காதலை எதிர்த்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மோமினா பேகம், தனது கள்ளக்காதலன் சுதீப் பால் என்பவருடன் இணைந்து இமாமை கொலை செய்ய திட்டமிட்டதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
திட்டமிட்டபடி, சுதீப் பால் தொலைபேசி மூலம் இமாமை சுமார் 95 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மேற்கு வங்காளத்திற்கு வரவழைத்துள்ளார். கடந்த திங்கட்கிழமை இரவு, சுதீப் மற்றும் அவரது கூட்டாளிகள் இணைந்து இமாமை கூர்மையான ஆயுதங்களால் தாக்கி கொலை செய்ததாக கூறப்படுகிறது. பின்னர் அடையாளத்தை மறைக்கும் நோக்கில் அவரது தலையை துண்டித்து, உடல் பாகங்களை வெவ்வேறு இடங்களில் வீசியுள்ளனர்.
மறுநாள் செவ்வாய்க்கிழமை, தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் ரத்தக்கறையுடன் கிடந்த இமாமின் உடலைக் கண்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து வழக்குப் பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி, இரண்டு நாட்களுக்குள் கொலைக்கான பின்னணியை கண்டுபிடித்தனர்.
இந்த வழக்கில் இமாமின் மனைவி மோமினா பேகம், கள்ளக்காதலன் சுதீப் பால், அவரது இரண்டு உறவினர்கள் மற்றும் ஒரு நண்பர் என மொத்தம் 5 பேரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.
மேலும், உடல் கண்டெடுக்கப்பட்ட இடத்திலிருந்து சுமார் 5 கிலோமீட்டர் தொலைவில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இமாமின் தலை மற்றும் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதத்தையும் போலீசார் மீட்டனர். கைது செய்யப்பட்ட 5 பேரும் சிலிகுரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், இந்த வழக்கில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




