கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தர்பூசணி விளைச்சல் அதிகரித்துள்ள நிலையில், அதற்கேற்ற விலை கிடைக்காததால் விவசாயிகள் கடும் நஷ்டத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.
ஒரு கிலோ தர்பூசணிக்கு வியாபாரிகள் ரூ.2 முதல் ரூ.6 வரை மட்டுமே விலை நிர்ணயிப்பதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். இதனால் அறுவடை மற்றும் போக்குவரத்து செலவுக்குக் கூட வருமானம் கிடைக்காத சூழல் ஏற்பட்டுள்ளது.
ஒரு ஏக்கர் தர்பூசணி சாகுபடிக்கு ரூ.70 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை செலவு செய்துள்ள விவசாயிகள், தற்போது முதலீட்டுத் தொகையைக் கூட மீட்டெடுக்க முடியாமல் தவித்து வருகின்றனர். விலை இல்லாத காரணத்தால் பல இடங்களில் பழங்களை அறுவடை செய்யாமல் வயலிலேயே விட்டுவிடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தர்பூசணிகள் அழுகி வீணாகி வருவதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
தர்பூசணிக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம் செய்யவும், அரசு கொள்முதல் நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




