தமிழ்நாடு சட்டமன்றத்தில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, அரசு மருத்துவக் கட்டமைப்பின் தரம் மேலும் உயர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
உடல்நிலை பாதிக்கப்பட்டால் அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் தயக்கமின்றி ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறும் அளவிற்கு, அரசு மருத்துவமனைகளின் வசதிகளும் சிகிச்சைத் தரமும் மேம்படுத்தப்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.
அதேபோல், ரேஷன் அரிசியின் தரம் குறித்தும் அவர் கருத்து தெரிவித்தார். பெரும்பாலான சட்டமன்ற உறுப்பினர்கள் ரேஷன் அரிசியை பயன்படுத்துவதில்லை எனக் குறிப்பிட்ட ஆதவ் அர்ஜூனா, எம்.எல்.ஏ.க்களும் ரேஷன் கடைகளுக்குச் சென்று அரிசி வாங்கி சாப்பிடும் அளவிற்கு அதன் தரம் உயர்த்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
அரசு மருத்துவமனைகள் மற்றும் பொது விநியோகத் திட்டத்தின் தரம் குறித்து சட்டமன்றத்தில் அவர் முன்வைத்த இந்தக் கருத்துகள் தற்போது கவனம் பெற்றுள்ளன.




