சிறுகதை..!! படித்ததில் கண்களையும் மனதையும் கலங்க வைத்த பதிவு..!!

Oplus_0

சிறுகதை

என் நண்பனின் கல்யாண ரிசப்ஷன். தாமதமாக சென்றேன். மண்டபம் கிட்டத்தட்ட காலியாக இருந்தது. மணமக்களின் குடும்பத்தினர் இருந்தார்கள்.

“இப்போ தான் சாப்பிட்டோம். நீங்க சாப்பிட்டு வாங்க”

மாடியை காட்டினார்கள். மணமக்களை வாழ்த்திவிட்டு, போட்டோக்கு நின்றுவிட்டு படி ஏறிச்சென்றேன்.

வரிசைகள் காலியாக இருந்தது. கேட்டரிங் பணியாளர் ஒருவர் இலை போட்டார்.

போட்டோ , வீடியோக்காரர்கள் 4 பேர் என் பக்கத்தில் வந்து அமர்ந்தார்கள்.

“சும்மா வெக்கப்படாம வாடா ”

ஒரு சிறுவனை அழைத்தார்கள். அவன் தயங்கி தயங்கி உட்கார்ந்தான். அவன் வயது 8 அல்லது 9 இருக்கக்கூடும்.அவனுக்கும் இலைப் போட்டு பரிமாறத் தொடங்கினார்கள்.

சாப்பிடத் தொடங்கினான். .

எங்கள் இலைகளில் மைசூர்பாக்கு வைத்தார்கள்.

“வீடியோ எடுக்க கத்துக்கொடுங்க அண்ணானு கேட்டுட்டே இருந்தான். சரிடா தம்பி எங்க கூட வந்து வேடிக்கை பாத்து கத்துக்கோடானு கூட்டிட்டு வந்துட்டோம். எங்க ஸ்டூடியோ பக்கத்துல தான் பையன் வீடு ”

சிறுவன் ஆமோதிப்பது போல் தலை ஆட்டினான்.

“நல்லா கத்துக்கிட்டியா ” என்றேன்.

மீண்டும் தலை ஆட்டினான்.

“உன் பேர் என்ன ?”

“சதீஷ் ”

“எந்த க்ளாஸ் படிக்கிற ”

“4 ”

சாப்பிட்டு முடித்து இருந்தான்.

“சாப்பாடு வைக்கவா ”

“”போதும் அண்ணா ”

அவன் இலையில் மைசூர்பாக்கு மட்டும் சாப்பிடாமல் வைத்து இருந்தான்.

தன் சட்டைப்பையில் ஒரு செய்தித்தாள் பகுதி எடுத்து கிழித்து வைத்திருந்தான்.அதில் மைசூர்பாக்கை மடித்தான்.

“இங்க சாப்பிட மாட்டியா ”

“தம்பிக்குணா . நான் தான் இங்கே நிறைய சாப்ட்டுட்டேனே ”

கேட்டரிங் நபர் இன்னொரு மைசூர்பாக்கை அவன் இலையில் வைத்தார்.

“அதை தம்பிக்கு கொடு . இதை நீ சாப்பிடு ” என்றார்.

அவன் அதையும் பேப்பரில் மடித்தான் ,

“தம்பிக்கு ஒன்னு கொடுத்துடுவேன் , இதை புட்டு நானும் அம்மாவும் சாப்பிடுவோம் ”

அவன் அப்பாவை பற்றி கேட்க நினைத்தேன். அநாகரீகம் என்று எண்ணியதால் கேட்கவில்லை. விருப்பம் இருந்தால் அவன் சொல்லட்டும்.

கேட்டரிங் நபர் இன்னும் ஒரு மைசூர் பாக்கு வைத்தார் .

“அம்மாக்கு ஒன்னு ,தம்பிக்கு ஒன்னு கொடு . இதை நீ இங்க சாப்பிடு ”

“வீட்டுக்கு போயி மூணு பேரும் சேர்ந்து சாப்பிடறோம் அண்ணா. நான் ரெண்டு எடுத்துட்டு போனா அம்மா வேண்டாம்னு சொல்லிடுவாங்க.நீங்க ரெண்டு பேரும் சாப்பிடுங்கனு எங்க கிட்டயே கொடுத்துடுவாங்க. கல்யாண மண்டபத்துல கொடுத்தாங்க னு சொன்னா அம்மா ஒன்னும் சொல்ல மாட்டாங்க ”

அவன் மூன்றையும் பேப்பரில் மடித்தான்.

கேட்டரிங் நபர் மேலும் ஒன்றை வைத்தார்.

“நான் எப்படி 2 சாப்பிடுவேன் . இதை நாளைக்கு காத்தால ஸ்கூல் போறதுக்கு முன்னாடி நானும் தம்பியும் பாதி பாதி சாப்பிடுகிறோம் அண்ணா ”

நான்கையும் பேப்பரில் மடித்தான்.

கேட்டரிங் நபர் ஒரு மைசூர்பாக்கை எடுத்தார். இரண்டாக உடைத்தார்.

“இது என்னோடதுடா, இது தான் லாஸ்ட் . பாதி நான் சாப்பிடறேன் .நீ பாதி மைசூர்பாக்கை இங்கேயே என்னோட கண்ணு முன்னாடி சாப்பிடுடா ”

சதீஷ் பாதி மைசூர்பாக்கை சாப்பிட்டான் .

“ரொம்ப டேஸ்ட்டா ,சூப்பரா இருக்குணா ”

இன்னொரு பாதி எடுத்து அவனிடம் கொடுத்தார்.

“இந்த பீஸ் கூட நீயே சாப்பிடுடா . ம்ம்ம் சும்மா சாப்பிடுடா ”

சாப்பிட்டான். முகத்தை மூடி வேறு பக்கம் திருப்பி கண்களை துடைத்தான்.

“அழுவறியா சதீஸு ”

“இல்லேண்ணா ,கண்ல ஏதோ தூசி விழுந்துடுச்சுணா ” என்றான்.

Read Previous

சக மனிதர்களிடம் அன்பை காட்ட வேண்டும்.. என்பதை உணர்த்திய பதிவு..!!

Read Next

நவீன காலத்து அரிச்சந்திரன்.. அருமையான சிறுகதை கண்டிப்பா படிங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular