தடைகள் நீங்கி விரைவில் கல்யாணம் கைகூட வேண்டுமா? இந்தப் பூஜையை தரிசித்தாலே போதும்..!!

Oplus_131072

தடைகள் நீங்கி விரைவில் கல்யாணம் கைகூட வேண்டுமா? இந்தப் பூஜையை தரிசித்தாலே போதும்!

பொதுவாக செவ்வாய் தோஷப் பாதிப்புள்ள ஜாதகங்கள், சர்ப்ப கிரகங்களால் பாதுப்புள்ள ஜாதகங்கள் எனில், அந்த ஜாதகக் காரர்களுக்கு அவ்வளவு எளிதில் கல்யாணம் கூடிவராது.

பொதுவாக லக்னம் அல்லது ராசியை பாவ கிரகங்கள் பார்த்தா லும், லக்னாதிபதி மற்றும் ராசிக்கு உரிய அதிபதியைப் பாவர்கள் பார்வை இட்டாலும் திருமணமாகப் பல ஆண்டுகள் ஆகிவிடலாம்.

ஜாதகரின் லக்னத்துக்கு 7, 3-ல் பாவர்கள் அமர்ந்து, 7-க்கு உடையவரோ 3-க்கு உடையவரோ நீசமாகி இருந்தால், திருமணத் தடை உண்டாகும். லக்னத்துக்கு இரண்டுக்கு உடையவரோடு சனி, ராகு, கேது சேர்ந்திருப்பின், திருமணத்தடை வரக்கூடும்.

ஒரு ஜாதகருக்கு ஏழாம் அதிபதி 6, 8, 12-ல் மறைந்து பகை சாரமாகி, பாபர்கள் 7-ம் இடத்தைப் பார்வையிட்டு, சுக்கிரன் கெட்டுவிட்டால், திருமணம் என்ற மங்கள வைபவம் கனவாகவே இருக்கும் என்கிறது ஜோதிடவிதி.

இப்படி எவ்வளவோ பாதிப்புகளால், தங்கள் பிள்ளைகளின் கல்யாணக் கனவுகள் சிதைந்துபோக, பெரிதும் கலங்கித் தவிக்கும் பெற்றோர்கள் ஏராளம். இவர்கள், ஒருமுறை குடும்பத்துடன் திருவானைக்கா சென்று, அங்கே உச்சிக் காலத்தில் நடைபெறும் பூஜை-வழிபாடுகளைத் தரிசித்து மனமுருக வேண்டிக்கொண்டாலே போதும்; நீங்கள் நினைத்தபடி பிள்ளைகளுக்கு நல்ல மணவாழ்க்கை விரைவில் அமைந்துவிடும்.

சிவபெருமானுக்குரிய பஞ்சபூத தலங்களில் நீர்த் தலமாகத் திகழும் தலம் திருவானைக்கா. இங்கே உச்சிக்காலத் தில் நடைபெறும் பூஜையைத் தரிசித்தாலே போதும், கல்யாண வரம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. திருவானைக்கா தலத்தில் உச்சிக்காலத்தில் அம்பாளே ஈசனைப் பூஜிப்பது, வேறெந்த தலத்திலும் காண்பதற்கரிய வைபவம்.

கயிலையில் ஒருநாள் ஈசனும் அம்பிகையும் தனித்திருக்கும் வேளையில், ஈசன் யோகநிலையை மேற்கொள்ள, ‘அருகில் தேவி நான் இருக்கையில், இவருக்கு யோகநிலையா?’ என ஊடல் கொண்டாள் அம்பிகை. உலகத்தில் உள்ள தன்னுடைய பிள்ளை களை எல்லாம் பார்க்க வேண்டும் என்று அம்பிகைக்கு ஆசை!

அந்த ஆசை நிறைவேற வேண்டுமானால், அவள் ஈசனைப் பிரிந்து பூமிக்குச் செல்லவேண்டும். அதற்கு ஈசனின் சம்மதம் கிடைக்காது என்பதால்தான், அவருடைய கோபத்துக்கும் சாபத்துக்கும் ஆளாகி, அதன் விளைவாக இந்த உலகத்துக்கு வந்து நமக்கெல்லாம் அருள் புரியத் திருவுள்ளம் கொண்டுவிட்டாள் அம்பிகை.

அதன்படியே, சிறந்த சிவபக்தரான ஜம்பு மகரிஷி வெண்நாவல் மரமாகத் திகழும் திருத் தலத்துக்கு வந்துவிட்டாள். அப்படி அவள் வந்து சேர்ந்த இடம்தான் இந்த திருவானைக்கா திருத்தலம்.அம்பிகை ஈசனின் சாபத்துக்கு ஆளாகி இத்தலத்துக்கு வருவதற்கு முன்பே, ஜம்பு மகரிஷி இங்கே வெண்நாவல் மரமாகத் தோன்றி விட்டார். அவர் ஏன் வெண்நாவல் மரமாக வடிவெடுத்தார்?

ஒருமுறை, அவர் சிவபெருமானை தரிசிக்கச் சென்றபோது, ஒரு வெண்நாவல் கனியைக் கொண்டுபோய்க் கொடுத்தார். பக்தன் அன்போடு கொடுத்த நாவல் பழத்தை ஈசன் சுவைத்துவிட்டுக் கொட்டையை உமிழ்ந்தார். ஜம்பு மகரிஷி அந்தக் கொட்டையை சிவனருட் பிரசாதமாக விழுங்கிவிட்டார். அப்படி அவர் விழுங்கிய கொட்டையே அவருள்ளிருந்து வெண்நாவல் மரமாக வளர்ந்து, காலங்களைக் கடந்தும் பசுமையும் செழுமையும் மாறாமல் தல விருட்சமாகத் திகழ்கிறது.

இத்தகு சிறப்புகள் கொண்ட இந்தத் தலத்துக்கு வந்து சேர்ந்த அம்பிகை, நீரையே திரட்டி சிவலிங்கமாகச் செய்து சிவபூஜையும், சிவ தியானமும் செய்து சிவபெருமானை வழிபடலானாள். சிவ பெருமானின் அருளும், அவரை மணந்துகொள்ளும் பாக்கியமும் அவளுக்கு இன்னமும் கிடைக்கவில்லை. அதனால்தான் இன்னமும் அவள் நீராய் நின்று, நிலம் காக்கும் அந்த நிமலனை நித்தமும் இத் திருத்தலத்தில் பூஜித்தபடி இருக்கிறாளாம்!

என்ன விந்தை இது?! அகிலத்தையே ஆளும் வல்லமை கொண்ட அகிலாண்டேஸ்வரியால் இன்னமும் சிவபெருமானை மணக்க முடிய வில்லை என்றால், வியப்பாக உள்ளதே! ஆனால், அதற்கும் ஒரு காரணம் இருக்கிறது.

ஆம்! இங்கே அம்பாள் சிவபெருமானிடம் யோகம் பயிலும் மாணவி யின் நிலையில் இருப்பதால், அம்பிகைக்கு இங்கே திருமணம் நடைபெறவில்லை. எனவேதான், இந்தக் கோயிலில் திருமண உற்ஸவம் நடப்பதில்லை. ஆனால், அம்பிகையின் சங்கல்பப்படி, உச்சிக்காலத்தில் அம்பிகை சிவபெருமானை பூஜிப்பதையும், கோ பூஜை செய்வதையும் தரிசிப்பவர்களுக்கு நல்ல வரன் அமைந்து திருமணம் கூடிவருகிறது என்பது நிதர்சனமான உண்மை.

அனுதினமும் நிகழும் இந்த வைபவத்தைத் தரிசிக்க பெருங் கூட்டம் கூடுகிறது. இந்தக் கோயிலில். எப்படி நிகழ்கிறது அந்தப் பூஜை வைபவம்?

திருவானைக்கா கோயிலில், அம்பிகை சந்நிதியின் அர்ச்சகர்தான், அம்பாளைப் போலவே பட்டுச் சேலை அணிந்து, தலையில் கிரீடமும், கழுத்தில் ருத்திராட்ச மாலையும் தரித்து, ஜம்புகேஸ்வரரை வழிபடச் செல்கிறார். உடனே அம்பாள் கருவறையின் கதவுகள் மூடப்பட்டன.

அர்ச்சகர் வடிவில் வருபவள் சாட்சாத் அம்பிகையே என்பதால், ஐயனின் பூஜையையும், கோபூஜையையும் முடித்துவிட்டு வரும்வரை அம்பாள் சந்நிதியின் கதவுகள் மூடப்பட்டே இருக்குமாம்.

முன்னே கோயில் யானை செல்ல, தொடர்ந்து மங்கல இசை ஒலிக்க, அம்பிகையாய் வரும் அர்ச்சகர், பிராகார வலம் வந்து ஜம்பு கேஸ்வரர் சந்நிதிக்குள் செல்கிறார். சுவாமி சந்நிதியில் மிக அற்புதமாக பூஜை-வழிபாடுகளை நடத்துகிறார்.

பின்னர், சுவாமி சந்நிதியின் எதிரில் நிறுத்தப்பட்டிருக்கும் – அலங்கரிக்கப்பட்ட பசுவுக்கு மஞ்சள் தடவி, மாலை அணிவித்து, கோபூஜையும் தீபாராதனையும் செய்கிறார். கல்யாண வரம் வேண்டும் ஆண்களும் பெண்களும், பிள்ளைகளுடன் வந்திருக்கும் பெற்றோர்களும் மனமுருக வேண்டிக்கொள்கிறார்கள்.

கல்யாண வரம் என்றில்லை, இந்தப் பூஜையை தரிசிக்கும் வேளை யில் நம் மனதில் நினைத்துப் பிரார்த்திக்கும் வேண்டுதல்கள் அனைத் தும் சீக்கிரம் நிறைவேறும் என்பது நம்பிக்கை. அதேபோல், அம்பாளின் அருளால், நம்மைப் பீடித்துள்ள சகல தீவினைகளும், நமக்குள் இருக்கும் எதிர்மறை எண்ணங்களும் பொசுங்கிப்போகும் என்கிறார்கள். காரணம் அம்பாள் அணிந்திருக்கும் தாடங்கங்களின் மகிமை!

ஆதிசங்கரர் இந்தத் தலத்துக்கு விஜயம் செய்தபோது, அம்பிகை மிகவும் உக்கிரமாக இருந்தாளாம். எனவே, ஆதிசங்கரர் அம்பிகையின் உக்கிரத்தை அப்படியே சக்ரத்தில் ஆவாஹனம் செய்து, அதையே அம்பிகையின் இரண்டு காதுகளிலும் தாடங்கமாக அணிவித்து விட்டார். அன்றிலிருந்து அம்பிகை சாந்த ஸ்வரூபியாக மாறிவிட்டா ளாம்.

பொதுவாக, அம்பாளின் திருவுருவத்துக்கு முன்பாக ஸ்ரீசக்ரம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும். ஆனால், இங்கு ஸ்ரீசக்ரமே அம்பிகையின் தாடங்கங்களாகப் பிரகாசிப்பதன் காரணம் அதுதான்!
நீங்களும் ஒருமுறை உங்கள் பிள்ளைகளுடன் திருவானைக்கா சென்று இந்தப் பூஜையைத் தரிசித்து வாருங்கள்; தடைகளும் தோஷங்களும் விலகி உங்கள் பிள்ளைகளுக்குக் கல்யாணம் கைகூடும்; விரைவில் வீட்டில் கெட்டிமேளச் சத்தம் கேட்கும்.

Read Previous

படுக்கை அறையில் இடைவெளி விட்டு உறங்கும் தம்பதிகளா நீங்கள்..?? இதனால் உண்டாகும் முக்கியமான சில தீய விளைவுகள்..!!

Read Next

இரவு தூக்கத்தை அலட்சியப்படுத்துகிறீர்களா..?? மூளை , நோய் எதிர்ப்பு சக்தியை பாதிக்கும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular