நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு நெருக்கமானவராக அறியப்படும் திரைப்பட இயக்குநர் களஞ்சியம், கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக சீமானுக்கு எழுதியுள்ள கடிதத்தில், கொள்கை மற்றும் கருத்து வேறுபாடுகளுடன் கட்சியில் தொடர்ந்து பயணிப்பது ஆரோக்கியமானதாக இருக்காது என்பதால் இந்த முடிவை எடுத்ததாக தெரிவித்துள்ளார்.
மேலும், சமீபகாலமாக கட்சியில் ஏற்பட்டுள்ள உள்மாற்றங்கள் மற்றும் மாற்று அரசியல் தலைவர்கள் மீது வைக்கப்படும் கடுமையான விமர்சனங்கள் தனக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இத்தகைய அரசியல் அணுகுமுறை நாம் அனைவரும் முன்னெடுக்க விரும்பும் தமிழ் தேசிய நோக்கத்திற்கும் அரசியல் பண்பாட்டிற்கும் ஏற்றதல்ல என்றும் அவர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
கட்சியின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவராகக் கருதப்பட்ட களஞ்சியத்தின் இந்த விலகல், நாம் தமிழர் கட்சியின் தற்போதைய அரசியல் நகர்வுகள் குறித்து மீண்டும் விவாதங்களைத் தூண்டியுள்ளது.




