தூத்துக்குடி அருகே அத்திமரப்பட்டியில் உள்ள மாநகராட்சி அரசு நடுநிலைப்பள்ளியில், ஆசிரியை ஒருவரிடம் இருந்து மர்ம நபர் 16 சவரன் தங்க தாலிச் செயினைப் பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளியில் பணியாற்றும் ஆசிரியை சாந்தி, நேற்று மதியம் கழிப்பறைக்குச் சென்றபோது, அங்கு பதுங்கியிருந்த நபர் திடீரென அவரது கழுத்தில் இருந்த தாலிச் செயினைப் பறித்துவிட்டு தப்பியோடியதாக கூறப்படுகிறது. பறிக்கப்பட்ட நகையின் மதிப்பு சுமார் ரூ.20 லட்சம் என தகவல் வெளியாகியுள்ளது.
ஆசிரியை சத்தமிட்டதைத் தொடர்ந்து அங்கிருந்தவர்கள் ஓடி வந்தனர். ஆனால் அதற்குள் அந்த நபர் அருகிலிருந்த வாழைத்தோட்டம் வழியாக தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம நபரை அடையாளம் காணும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




