Oplus_131072
முட்டையானது புரதச்சத்தின் சிறந்த ஆதாரமாகக் கருதப்பட்டாலும், அதன் மஞ்சள் கருவில் அதிக கொழுப்பு இருப்பதாகக் கூறி உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் அதனைத் தவிர்த்து வருகிறார்கள்.முட்டையின் மஞ்சள் கருவில் உடலுக்கு நன்மை பயக்கும் ஆரோக்கியமான கொழுப்புகள், வைட்டமின்கள் ஏ, டி, ஈ, கே, இரும்புச்சத்து, பாஸ்பரஸ் மற்றும் மூளை வளர்ச்சிக்குத் தேவையான கோலின் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.
எனினும், முட்டையின் வெள்ளைக் கருவை விட மஞ்சள் கருவில் கலோரிகள் அதிகம் என்பதால், போதிய உடற்பயிற்சி இல்லாமல் இதனை அளவுக்கு அதிகமாக உட்கொண்டால் மட்டுமே உடல் எடை அதிகரிக்க வாய்ப்புள்ளது என அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
ஊட்டச்சத்து நிபுணர்களின் கூற்றுப்படி, உடல் எடை அதிகரிப்பு என்பது நாம் சாப்பிடும் ஒரே ஒரு உணவால் ஏற்படுவதில்லை, மாறாக அது நமது ஒட்டுமொத்த உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் கலோரி சமநிலையைப் பொறுத்தே அமைகிறது.
நாம் தினசரி சமச்சீரான உணவை உட்கொண்டு, தவறாமல் உடற்பயிற்சி செய்து வந்தால், தினமும் ஒன்று அல்லது இரண்டு முழு முட்டைகளை மஞ்சள் கருவுடன் சாப்பிடுவது உடல் எடையை அதிகரிக்காது.
அதேசமயம், அதிக கொலஸ்ட்ரால், இதய நோய் அல்லது குறிப்பிட்ட உடல்நலப் பிரச்சினைகள் உள்ளவர்கள் மட்டும் மருத்துவர்களை ஆலோசித்த பின்னர் முட்டை சாப்பிடுவது சிறந்தது.
எனவே, உடல் எடை கூடிவிடும் என்ற தேவையற்ற பயத்தினால் மஞ்சள் கருவை முற்றாகத் தவிர்க்காமல், சீரான உணவு முறையோடு மிதமான அளவில் சேர்த்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.




