90ஸ் காலத்தில் அது தான் சிறுவர் மற்றும் சிறுமிகளுக்கான ஊட்டச்சத்து மிக்க பானம். சிறுவயதில் ஒவ்வொரு வீட்டிலும் முட்டைப்பால் குடிப்பது கட்டாயமாக வைத்திருந்தனர். எனக்கு தெரிஞ்ச வரை 90 களின் ஆரம்ப காலகட்டத்தில் இத்தனை விரதம் இல்லை. அமாவாசை ஒருநாள் மட்டும் விரதம்.
அதன் பின்னர் எங்கள் வீட்டில் அப்பா திருப்பதி போய் வந்ததும் சனிக்கிழமை , புரட்டாசி விரதத்தை வீட்டில் அறிமுகம் செய்தார்கள் , பின்னர் அப்பா மாலை போட கார்த்திகை , மார்கழி முழுக்க விரதமானது. அடுத்து ஆடி வெள்ளி , ஆவணி ஞாயிறு, பங்குனி மாதம் பாதி, கார்த்திகை , சங்கட சதுர்த்தி , பிரதோஷம் , வியாழக்கிழமை , சோமவாரம் , பெளர்ணமி என்று வருடத்தின் பாதி நாள் விரதமானது. எங்களை பார்த்து ஊரும் மாறியது.
அதுக்கு முன்னாடி தினமும் முட்டைப்பால் தான். நாட்டுக் கோழி முட்டையை உடைத்து பாலில் ஊத்தி , அதை நுரை வரும் அளவிற்கு கலக்கி கொடுப்பார்கள் , பார்த்தாலே கொழ கொழவென்று இருக்கும். அதை வாயில் வைக்கும் போது குமட்டிக் கொண்டு வரும். ஒரு வாய் கூட குடிக்க முடியாது. திட்டு வாங்கி , அடி வாங்கி தான் குடிப்பேன். சில சமயம் குடிக்கும் போதே எதுக்களித்து துப்பி இருக்கேன்.
அக்கம் பக்கம் உள்ள வீடுகளில் முட்டைப்பாலை குடித்து விட்டு வீட்டை சுற்றி 10 முறை ஓடி வருவார்கள் . பாலில் முட்டையை குடிப்பது குமட்டல் வரும் என்றால் , பச்சையாக குடிக்க வேண்டும். அப்போது எல்லாம் முட்டையை பச்சையாக குடிப்பது ஒரு பேஷன், இளைஞர்கள் எல்லாம் காலையில் இரு பச்சை முட்டைகள் குடிப்பார்கள். இதை விட கொடுமை , கடையில் முட்டை அட்டையில் இருக்கும் இரண்டு முட்டையை எடுத்து கடை வாசலில் பச்சையாக குடிக்க பல பேர் இருப்பார்கள். தினமும் கடை ஓரத்தில் 20 முட்டை ஓடுகளாவது கொட்டிக் கிடக்கும்.
அப்போது எல்லாம் எல்லாார் வீட்டிலும் அவித்த முட்டை தான் மதிய சைட் டிஷ், அன்று ஆப் பாயில் , புல் பாயில் , ஆம்லெட் , மசாலா முட்டை எல்லாம் கிடையாது. எப்போதும் அவித்த முட்டை தான்.இன்று போல காய்கறிகளில் தொட்டுக்க எல்லாம் அதிகம் செய்ய மாட்டார்கள் , அன்று அசைவம் அதை விட்டால் ஊறுகாயை நக்கிக் கொள்ள வேண்டும். அரசுப் பள்ளியில் சத்துணவில் போடப்படும் முட்டையை அருகில் உள்ள கடையில் கொடுத்து மாணவர்கள் வேறு ஏதேனும் தின்பண்டங்கள் வாங்கித் தின்பார்கள். ஆசிரியர் கண்டுபிடித்து கடைக்காரனை திட்டுவார் , அவனுக்கும் கூச்சமே இருக்காது.
இப்போது காலம் மொத்தமாக மாறிவிட்டது. முட்டைப் பால் , பச்சை முட்டை எல்லாம் போய் விட்டது.




