Oplus_131072
இரண்டு முகங்கள்
ஒரு சிலர் எப்போதும் இரண்டு முகங்களை தான் கொண்டு இருப்பார்கள். ஒரு முகம் இந்த உலகிற்கும் இன்னொரு முகம் தன்னைச் சுற்றியுள்ள தன்னை நேசிக்கும் நபர்களுக்கு மட்டும். தன்னை நேசிக்கும் மற்றும் எந்த ஒரு இடத்திலும் எந்த ஒரு பிரச்சினையாக இருந்தாலும் தன்னோடு நிற்கும் உறவுகளுக்கும்.
எப்போதுமே புன்னகையோடு பேசும் முகம்…
எப்போதுமே சிரித்த முகமாய் பேசும் முகம்…
எப்போதுமே சிநேகத்தோடு பேசும் முகம்..
எப்போதுமே நன்றாக பேசும் முகம்…
எப்போதுமே நேர்மறையாக பேசும் முகம்…
எப்போதுமே நம்பிக்கையோடு பேசும் முகம்…
எப்போதுமே நமக்கு பழக்கப்பட்ட முகம்…
இதைத் தாண்டிய இன்னொரு முகம் தான் நமக்குத் தெரியாத உண்மையான முகம். அது என்னவென்றால்
மூடிய கதவுகளுக்குள் மட்டுமே வெளிப்படும் முகம்..
இந்த உலகத்தின் கூச்சலிலிருந்து வெகுதூரத்திற்கு வந்தபின் வரும் முகம்…
தன் உணர்ச்சிகளுடன் உண்மையாய் போராடும்போது இருக்கும் முகம்…
எவருக்கும் பொய்யாய் நடிக்கவேண்டிய அவசியமில்லாத முகம்…
எவரும் இல்லாத தனிமைகளில் பிரதிபலிக்கும் முகம்…
எவருக்கும் எந்த விளக்கமும் சொல்லத் தேவைப்படாத பொழுதில் இருக்கும் முகம்…
எந்த கவலையும் இல்லை என்பது போல
எந்த பிரச்சனையும் இல்லை என்பது போல
எந்த மனப்போராட்டமும் இல்லை என்பது போல
எல்லாமே சுபம் தான் என்பது போல
நடித்து நடித்து ஓய்ந்து போன முகம்…
தூரத்து நிலவை வெறித்துக்கொண்டோ
படுக்கைறையின் சுவரை வெறித்துக்கொண்டோ
சாப்பாட்டு தட்டினில் கோலம் போட்டுக்கொண்டோ
வீட்டு வாசலை வெறித்துக்கொண்டோ அமர்ந்திருக்கும் முகம்…
குளிக்கும்போதும்
மழையில் நனையும்போதும்
தனியாக பயணப்படும்போதும்
படுக்கையில் குப்புற விழும்போதும்
வீட்டு வேலைகள் செய்யும்போதும் கண்ணீரை சுரக்கும் முகம்…
எவரேனும் பார்த்தால் தூசி விழுந்தது போல நடித்து சமன் செய்யும் முகம்…
கண்ணாடியில் பார்க்கும்போதெல்லாம்
தன்னைத்தானே கேள்வி கேட்கும் முகம்…
நீயா இது என்று தனக்குத்தானே கேட்டுக்கொள்ளும் முகம்…
அவர்களுக்கு என்ன பிரச்சனை??
அவர்கள் நன்றாகத்தானே இருக்கிறார்கள்??
அவர்களைப் போல உறுதியானவர்கள் உண்டோ???
என்று கேள்வி கேட்டுக்கொண்டே
இந்த உலகம் அந்த முகத்தை கவனிக்காமல் இருக்கிறது.
எல்லோருக்கும்
எல்லா நேரத்திலும்
எந்த விதத்திலும்
பக்க துணையாக இருக்கும் அதே முகம்
தனக்கென்று உண்மையாக
தத்தளித்துக்கொண்டிருப்பது தெரியாது…
தாங்கள் இழந்தவற்றை கிரகிக்க முடியாமல்
தடுமாறிக்கொண்டிருப்பது எவருக்குமே தெரியாது..
தங்களது வசந்தகாலத்தின் புத்தகம்
முற்றுபெற்றுவிட்டது என்னும் ஓலம் எவருக்குமே தெரியாது…
எல்லாமே மனதிற்குள் மட்டும்
திரும்பத் திரும்ப பார்த்து
ஏங்கித் தவித்து
எல்லாம் ஒரு நாள் சரியாகலாம்
என்று பொய்சாக்கு சொல்லிக்கொண்டு
வளைய வருவது எவருக்குமே தெரியாது…
ஏனென்றால் எதுவுமே சரியாகப் போவதில்லை
என்று அந்த முகத்திற்கு தெரியும்..
எல்லாம் இப்போது மாறிவிட்டது
என்று அந்த முகத்திற்கு தெரியும்..
வேடிக்கை என்னவென்றால்
சிக்கலான ஆழத்தில்
ஆயிரம் வார்த்தைகளுக்கு அடியில் இருக்கும் இந்த முகம்
நமக்கு தெரிந்துவிட்டால்
இதற்கு முன் நாம் பழகியிருந்த
அந்த புன்னகை பூசிய முகம்
நம்மை சுட்டுப் பொசுக்கிவிடும்…




