நம்மில் பல பேருக்கு சமைப்பது மிகவும் பிடித்த ஒரு விஷயமாக இருக்கும். ஆனால் சமைக்கின்ற பொழுது ஏதேனும் தவறுகளை செய்வது வழக்கமாகத்தான் நாம் வைத்திருப்போம். அப்படி நடக்கின்ற தவறுகளை திருத்திக்கொள்ள என்னென்ன செய்யலாம் என்று இந்த பதிவில் தெளிவாக காண்போம்.
இட்லி மாவில் உளுந்து பத்தாமல் மாவு கெட்டி ஆகிவிட்டால் பச்சை அப்பளங்களை தண்ணீரில் நனைத்து ஜாரில் போட்டு அரைத்து மாவில் கலந்து விட வேண்டும். இப்படி செய்வதன் மூலம் உளுந்து போட்டதை போல இட்லி மாவு கெட்டியாகாமல் இருக்கும். உருளைக்கிழங்கை சமைக்கின்ற போது அதிகமாக வேக வைத்து விட்டால் பால் பவுடரை கொஞ்சம் கிழங்குக்கு மேல் தூவி விடுங்கள். அப்படி செய்தால் உருளைக்கிழங்கு கெட்டி ஆகிவிடும்.
சப்பாத்தி மாவு பிசைகின்ற பொழுது சொத சொதவென்று ஆகிவிட்டால் அந்த மாவை ப்ரீசரில் வைத்து விடுங்கள். அரை மணி நேரத்துக்குப் பின் சப்பாத்தி மாவு எப்பயும் போல மாறிவிடும். கோதுமை மைதா போன்ற மாவுகளை பயன்படுத்தி பூரி சப்பாத்தி செய்கின்ற பொழுது மாவு தேவையான அளவு இல்லை என்று தெரிந்து விட்டால் உருளைக்கிழங்கை வேகவைத்து தோல் நீக்கி பிசைந்து அதை கோதுமை மாவு அல்லது மைதா மாவுடன் சேர்த்து பிசைந்து பூரி அல்லது சப்பாத்தியை செய்யலாம்.
நாம் செய்கின்ற சாம்பாரில் உப்பு அதிகமாகி விட்டால் ஒரு முள்ளங்கியை எடுத்து தோல் சீவி விட்டு சாம்பார் போட்டு ஐந்து நிமிடம் கொதிக்க வைத்து விடுங்கள். அதிகமான உப்பு இருந்தால் சுலபமாக உப்பின் சுவை குறைந்து விடும்.




