நம் எல்லோர் வீட்டிலும் திருமணம், காதுகுத்து, புதுமனை புகுதல் போன்ற சடங்குகள் நிகழ்ந்து கொண்டே தான் இருக்கும். அந்த சமயங்களில் அனைவரும் நல்ல நேரம் பார்ப்பதுண்டு. சிலர் காலண்டரையோ பஞ்சாங்கத்தையோ பார்த்து நாள் குறிப்பார்கள். ஒரு சிலர் ஜோசியர் அல்லது கோயில் குருக்களிடம் கேட்டு நாள் குறிப்பார்கள். நாள், திதி, நட்சத்திரம், யோகம், கர்ணம் என்ற ஐந்தும் சேர்ந்ததுதான் பஞ்சாங்கம். இந்த பஞ்சாங்கத்தில் அவரவர் ராசிக்கு ஏற்ப எது பொருந்துமோ அந்த நாளை குறித்து கொடுப்பார்கள். இதில் முக்கியமாக வருவது திதி. இந்த திதி எப்படிப்பட்டது சுப காரியங்கள் செய்யலாமா என்பதை பற்றி இனி காண்போம். இதை தெரிந்து வைத்துக் கொண்டால் வீட்டில் நடக்கும் சிறு காரியங்களுக்கு நீங்களே நாள் குறித்து விடலாம்.
திதி என்றால் தொலைவு என்று அர்த்தம். திதி என்பது வானவெளியில் சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே ஏற்படும் தூரத்தின் பெயராகும். பிரதமை, துவிதியை, திருதியை, சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி, சப்தமி, அஷ்டமி, நவமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி, சதுர்த்தசி, பௌர்ணமி அல்லது அமாவாசை என்று மொத்தம் 15 திதிகள் உள்ளன.
பௌர்ணமி, அமாவாசை ஆகிய திதிகள் தவிர மற்ற 14 திதிகளினால் சில சுப பலன்களும் சில அசுப பலர்களும் ஏற்படும். இனி நற்பலன் தரும் திதிகள் மற்றும் கிழமைகள் என்னவென்று பார்ப்போம். ஞாயிறு- அஷ்டமி, திங்கள்- நவமி, செவ்வாய்- சஷ்டி, புதன்- திரிதியை, வியாழன்- ஏகாதசி, வெள்ளி- திரையோதசி, சனி- சதுர்த்தசி. இத்தகைய நாட்களில் வரும் திதிகளில் எந்த ஒரு நல்ல காரியம் செய்தாலும் அது வெற்றியே கிட்டும்.
சுபகாரியங்களுக்கு செய்யக்கூடாத திதிகள் ஞாயிறு- சதுர்த்தசி, திங்கள்- சஷ்டி, செவ்வாய்- சப்தமி, புதன்- துவிதியை, வியாழன்- அஷ்டமி, வெள்ளி- நவமி, சனி- சப்தமி என மேற்குறிப்பிட்ட நாட்களில் அந்த திதிகள் வரும்போது அந்த நாட்களில் நற்காரியங்கள் செய்வதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அன்று செய்யப்படும் நற்காரியங்கள் பலன் அளிக்காது.
வளர்பிறை தேய்பிறை ஆகிய இரண்டு காலங்களிலுமே அஷ்டமி நவமி திதிகளை தவிர்க்க வேண்டும். அமாவாசை பௌர்ணமிக்கு முந்தைய நாளாக வரும் சதுர்த்தியும் அடுத்த நாளாக வரும் பிரதமையும் ஆகாத திதிகளாகும். இவ்விரண்டு திதிகள் வரும் நாட்களில் எந்த ஒரு நல்ல காரியத்தை துவங்கினாலும் பொருள் கஷ்டம், எதிர்ப்பு, விரோதம், நோய் போன்ற பாதிப்புகள் வரக்கூடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
வளர்பிறை, தேய்பிறை ஆகிய காலங்களில் சில திதிகளுக்கு இரண்டு கண்கள் இருக்கும். இத்திதிகளில் நற்காரியங்கள் செய்தால் இரட்டிப்பு பலன் கிடைக்கும். அவை என்னவென்றால் வளர்பிறை காலத்தில் வரும் அஷ்டமி, நவமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி திதிகளாகும். தேய்பிறை காலங்களில் வரும் துவிதியை, திருதியை, சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி, சப்தமி ஆகிய திதிகளும் ஆகும். ஆகவே இந்த திதிகளை எல்லாம் மனதில் கொண்டு சுப காரியங்களை தொடங்கும்போது அதற்குண்டான பலன் நமக்கு எளிதாக கிடைக்கும்.




