அத்தை பற்றிய அருமையான பதிவு..!! படித்ததில் கண் கலங்க வைத்த பதிவு..!!

Oplus_131072

அத்தை

தான் பெற்ற பிள்ளையை நடக்க வைத்துக் கொண்டு அண்ணன் மகனை இடுப்பில் தூக்கி சுமந்து சென்ற அத்தைகளிருந்தார்கள்
எம்மகள கட்டிக்கடா மருமகனே
என்றபடியே அண்ணன் மகன்களின்
குஞ்சாமணியைத் தொட்டுக் கொஞ்சி
முத்தமிட்ட அத்தைகளிருந்தார்கள்.
சின்னப் பாத்திரத்தில் கறித்துண்டுகள்
நீந்தும் கோழிக்குழம்பை இடதுகையால் பிடித்து முந்தானைச்சேலையால் மூடிக் கொண்டுவந்து பையனுக்குக் கொடுங்க அண்ணி என்று கொடுத்துவிட்டுப் போன
அத்தைகளிருந்தார்கள்.மருமகன்களின் பிறந்த நாட்களில் அத்தை தரும் சில்லறைக் காசுகளை மறுதலித்தால் கண்கள் நிறைந்த அழுகையாய் மூக்குறிஞ்சியபடி
காசை வாங்கிக்கடா என்று கெஞ்சிய
அத்தைகளிருந்தார்கள்.

குளிக்க மறுத்து ஓடிப்போகும் அண்ணனின் சிறு மகன்களைத் துரத்திப்போய்ப் பிடித்து வந்து சிரிப்புக் காட்டி அம்மணமாய்
நிறுத்தி எண்ணை தேய்த்துக் குளிக்க வைத்த
அத்தைகளிருந்தார்கள்.

இடுப்பில் தூக்கிச் சுமந்துபோய் திருவிழாவில் மருமகன் அழுவதைக் காணப்பொறாமல் இராட்டினத்தில்
சுற்றும் சுகத்தையும் கொடுத்த
அத்தைகளிருந்தார்கள்.SSLC முடித்து
பாலிடெக்னிக் சேர்க்க
பணம் குறைந்து கைபிசைந்து நின்ற நேரத்தில் இதைவெச்சு காலேஜுல சேர்த்துங்க அண்ணி.
அப்புறமா பார்த்துக்கலாம் என்றபடி எண்ணையிறங்கிய கல்லுக் கம்மலைக்
கழட்டிக் கொடுத்துப்போன அத்தைகளிருந்தார்கள்..சகோதரனின் பிள்ளைகளுக்கு பெரியம்மை
வந்தகாலத்தில் மாரியம்மனுக்கு வேண்டிக்கொண்டு மண்சோறுதின்ற
வெள்ளந்தி அத்தைகளிருந்தார்கள்.எம் மவனுக்குப் பொண்ணு கொடுக்காமல்
பெறத்திக்குக் கொடுக்கிறியே சண்டாளா
என்று அண்ணனிடம் சண்டையிட்டுப்போன
அத்தைகள் இருந்தார்கள்.போகட்டும் ரெண்டாம்
மகனுக்காவது பொண்ணைக் கட்டிக் கொடுத்திரனும்
எப்படியாவது சொந்தம் விட்டுப் போகக்கூடாதுன்னு
மூஞ்சியைத் தூக்கிவைத்துக்கொண்டே
மூக்கு நுனியில் கண்ணீர் வடித்தபடி மூத்தவனின்
திருமணத்தில் பாத்திரங்களை விளக்கிக் கொடுத்த அத்தைகளிருந்தார்கள்.

அண்ணன் பாவம்
நொடிஞ்சி கெடக்குது
எனக்கு வீடெல்லாம் வேண்டாம்
அண்ணனுக்கே கொடுத்திருங்க…ஒங்க மாப்பிள்ளைகிட்டே நான் சொல்லிக்கிறேன் என்று தகப்பனிடம்
அண்ணணுக்காக மன்றாடிய அத்தைகள்
இருந்தார்கள்.எல்லாந் தொலைந்து
கூட்டுக் குடும்பங்கள் அழிந்துபோய்
காங்கிரீட் கூடுகளுக்குள் பிழைத்துக் கிடக்கும் ஒற்றைப்பிள்ளைக்
குடும்பங்களின் அடுத்த தலைமுறைக்கு
வாய்க்கப் போவதேயில்லை….
அத்தைகளின் பாசப் பெருமழை.

Read Previous

எலி வலையானாலும் தனி வலை வேண்டும் என்பதை உணர்த்திய பதிவு..!! படித்ததில் பிடித்தது..!!

Read Next

மெய்யான உழைப்பின் வெற்றி – ஒரு நெகிழ்ச்சி கதை..!! படித்ததில் பிடித்தது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular