அம்மா உணவக வெற்றிக்கு திமுக அரசே காரணம்..!! தவெக உரிமைகோரலுக்கு மேயர் பிரியா பதிலடி..!!

 

அம்மா உணவகங்களின் தர உயர்வுக்கும், மக்கள் மத்தியில் மீண்டும் பெற்றுள்ள வரவேற்புக்கும் தற்போதைய ஆளும் கட்சியான தமிழக வெற்றி கழகம் (தவெக) காரணம் என்ற பேச்சுகள் பரவி வந்த நிலையில், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் (X) தளத்தில் அதிரடி விளக்கப் பதிவை வெளியிட்டுள்ளார்.

 

அந்தப் பதிவில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற நாள் முதல் அம்மா உணவகங்களின் தரத்தை உயர்த்தவும், ஏழை எளிய மக்களுக்கு தரமான உணவை வழங்கவும் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். அதன் விளைவாகவே, 2022 முதல் அம்மா உணவகங்களின் தரமும், விற்பனையும் தொடர்ந்து உயர்ந்து வந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

மேலும், 2024–25 நிதியாண்டில் ரூ.20 கோடி நிதி ஒதுக்கீட்டில் 290 அம்மா உணவகங்கள் முழுமையாகப் புனரமைக்கப்பட்டதாகவும், 2025–26 நிதியாண்டில் ரூ.7.06 கோடி செலவில் நவீன சமையல் இயந்திரங்கள் மற்றும் பாத்திரங்கள் வாங்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

 

அம்மா உணவகங்களை பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்ததன் காரணமாக, 2026 ஜனவரியில் மட்டும் ரூ.1.13 கோடி வருவாய் கிடைத்ததாகவும், அதன் பின்னர் பெரும்பாலான மாதங்களில் ரூ.1 கோடிக்கும் அதிகமான வருவாய் பதிவானதாகவும் அவர் கூறியுள்ளார்.

 

சர்வதேச போர் பதற்றத்தால் ஏற்பட்ட சமையல் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக ஏப்ரல் மாதத்தில் மட்டும் விற்பனை தற்காலிகமாக பாதிக்கப்பட்டதாகவும், மாநகராட்சி நிர்வாகத்தின் விரைவான நடவடிக்கையால் மே மற்றும் ஜூன் மாதங்களில் மீண்டும் ரூ.1 கோடிக்கும் அதிகமான விற்பனை நிலை எட்டப்பட்டதாகவும் மேயர் பிரியா விளக்கம் அளித்துள்ளார்.

 

தவெக தரப்பின் உரிமைகோரல்களுக்கு மத்தியில், அம்மா உணவகங்களின் முன்னேற்றத்துக்கு அடித்தளம் அமைத்தது ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசே என்ற கருத்தை வலியுறுத்தும் வகையில் மேயர் பிரியாவின் இந்த பதிவு அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read Previous

ஃபிரிட்ஜில் பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் வைக்கிறீர்களா? – கவனிக்க வேண்டிய முக்கிய தகவல்..!!

Read Next

ஆன்லைன் டெலிவரி ஊழியரின் செயலால் பரபரப்பு? – வைரல் வீடியோவால் பாதுகாப்பு குறித்து கேள்வி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular