அரசு போக்குவரத்து கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்புகளை அவ்வப்போது தமிழ்நாடு அரசு வெளியிடுவது வழக்கம். அந்தவகையில், சென்னை உட்பட 8 போக்குவரத்து மண்டலங்களில் காலியாக உள்ள 3,274 பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்புகளை தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி, கும்பகோணம் மண்டலத்தில் 756, சேலம் மண்டலத்தில் 486, சென்னையில் 364, திருநெல்வேலியில் 362, கோவையில் 344 மற்றும் மதுரையில் 322 ஓட்டுநர் மற்றும் நடத்துனர் காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளதாக அறிவித்துள்ளது.
இதையடுத்து, அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் காலியாக உள்ள 318 ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணியிடங்களை நிரப்ப உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மேலும், இதற்கு தமிழ்நாட்டை சேர்ந்த 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு, நாளை பிற்பகல் 1 மணி முதல் வருகின்ற ஏப்ரல் 21 ஆம் தேதி வரை அரசு போக்குவரத்து கழகத்தின் http://www.arasubus.tn.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது . மேலும், இதற்கு எழுத்து தேர்வு, செய்முறை தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




