Oplus_131072
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை தவிர்ப்பது ஏன்?
வருடத்தின் எல்லா மாதங்களுமே சிறப்பானவை என்றாலும் ஆடி மாதம் மிகச் சிறப்பானது. ஆடி மாதத்தை கற்கடக மாதம் என்பர்.
சூரியன் குருவின் நட்சத்திரமான புனர்பூசம் நான்காம் பாதத்தில் நுழையும் நேரத்தில் கடக ராசியில் சூரியன் செல்வதே ஆடி மாத துவக்கம்.
தமிழ் மாதப் பிறப்புகளுக்கு ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு முக்கியத்துவம் இருக்கிறது. எனவே அந்தந்த கால, பருவ சூழ்நிலைக்கு ஏற்ப திருவிழாக்களையும், உற்சவங்களையும், விரத வழிபாடுகளையும் ஏற்படுத்தி வைத்துள்ளனர்.
பொதுவாக திருமணம், புதுமனை புகுவிழா போன்ற சுபநிகழ்ச்சிகள் செய்ய ஆடி, மார்கழி மாதங்கள் ஏற்றதல்ல. இந்த மாதத்தில் சுபநிகழ்ச்சிகள் எதுவும் செய்யப்படுவதில்லை. இதற்கு காரணம் என்னவென்று இன்றைய பதிவில் தெரிந்து கொள்வோம்.
திருமணம் :
ஆடி மாதத்தில் திருமணம் நடைபெற்றால் திருமணத் தம்பதிகளை பிரித்து வைப்பார்கள். ஏனென்றால், ஆடி மாதத்தில் ஒரு பெண் கருவுற்றால் அவளுக்கு சித்திரை மாதத்தில் குழந்தை பிறக்கும். சித்திரை மாதத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். அதுமட்டுமல்லாமல் கத்திரி வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கும். எனவே, பிரசவ காலத்தில் பெண்ணுக்கும், பிறக்கும் குழந்தைக்கும் வெயில் காலம் சாதகமாக இருக்காது.
இந்த மாதத்தில் பிறக்கும் குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறையும். மேலும், இளம் குழந்தையால் கத்திரி வெயிலின் வெப்பத்தை தாங்க முடியாது. இதனால் தான் ஆடி மாதத்தில் திருமணம் செய்வதையும், கணவன் மனைவி கூடி இருப்பதையும் தவிர்த்தனர்.
இயற்கை மாற்றங்கள் :
ஆடி மாதத்தில் தெற்கு திசை நோக்கி பூமி நகரும் போது இயற்கையாக ஒரு சில பாதிப்புகள் ஏற்படக்கூடும். எனவே அதிக காற்று, நில அதிர்வுகள், கடல் சீற்றம் ஆகியவை ஆடி மாதத்தில் ஏற்படும். அதுமட்டுமல்லாமல் ஆடிக்காற்றில் அம்மியும் பறக்கும் என்ற பழமொழியும் உண்டு. அந்த அளவுக்கு காற்று அதிகமாக வீசும்.
ஆடி மாதத்தில் திடீரென்று மழை பெய்யும், பலத்த காற்றடிக்கும் போன்றவைகளால் ஆடி மாதத்தில் புதுமனை புகு விழா, பூமி பூஜை செய்தல் போன்ற மனை சார்ந்த எந்த விதமான சுபநிகழ்ச்சிகளையும் செய்வதில்லை.
குலதெய்வ வழிபாடு :
ஆடி மாதத்தில் விசேஷங்களும், திருவிழாக்களும் அதிகமாக வரும். அதனால் கோவிலுக்கு செல்வதும், குலதெய்வ கோவிலுக்கு குடும்பத்துடன் சென்று வழிபடும் வழக்கமும் கொண்டிருப்பார்கள்.
மேலும், ஆடி மாதத்தில் தான் அந்த பருவத்துக்கான விவசாயத்தை செய்வதற்கான பணிகளில் ஈடுபடுவார்கள். ஆடிப்பட்டம் தேடி விதை என்பதற்கேற்ப, ஆடி மாதம் விவசாயிகள் விதைக்கத் தொடங்குவார்கள். எனவே விவசாயம் செழித்து, வளம் பெருக வேண்டி ஆடி மாதத்தில் தங்கள் குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்வார்கள். எனவே, ஆடி மாதத்தில் வேறு எந்த விசேஷங்களும் குறிப்பாக செய்யப்படுவதில்லை.
வழிபாட்டுக்கு உகந்த மாதம் :
ஆடி மாதம் பீடு நிறைந்த மாதமாகும். எனவே, இந்த மாதத்தை மக்கள் மனபீடத்தில் இறைவனை நிலைநிறுத்துகிற மாதம் என்பர்.
இறைவனை வழிபடுவதற்காகவே ஒதுக்கப்பட்ட மாதம் என்பதாலும், இறை வழிபாடு செய்வதில் தடைகள் ஏற்படும் என்பதால் திருமணம் உள்ளிட்ட பல்வேறு சுபநிகழ்ச்சிகள் இந்த மாதத்தில் நடத்தப்படுவதில்லை.




