Oplus_131072
ஆர். எஸ். பதி தைலம்
தென் தமிழகத்தில் மதுரை ஆர்.எஸ்.பதி தைலம் இல்லாத வீடு இல்லை என்று சொல்லலாம். சளி, ஜலதோஷம், தலைவலி என்றால் உடனே இந்த தைலம் தான் நினைவுக்கு வரும். 1909ல் ஆர்.எஸ்.பதி நிறுவனம் மதுரை மேலமாசி வீதியில் தொடங்கப்பட்டது, கண்ணாடி பாட்டிலில் இந்த மருந்து கார்க் பூட்டி தான் விற்கப்பட்டது. ஆர்.சபாபதி என்பது தான் கால மாற்றத்தில் ஆர்.எஸ்பதி யாக சுருக்கப்பட்டது, இந்த குப்பியில் ஒட்டப்பட்டிருக்கும் படத்தில் தலைப்பாகையுடன் இந்த மருந்தை தயாரித்த மருத்துவரின் படம் அச்சிடப்பட்டிருக்கும்.
அன்றைய காலங்களில் நமது வீடுகளில் இருந்த ஒரு சிறந்த நாட்டு மருந்து தான் ஆர் எஸ் பதி மருந்து.
எங்கள் வீடுகளில் எங்கள் தாத்தா பாட்டிகள் அந்த ஆர்.எஸ்.பதி மருந்தை எடுத்து வா என கேட்க, நாங்கள் ஓடிப்போய் எடுத்து வந்து கொடுத்து நினைவுக்கு வருகிறது. இந்த மருந்து ஒரு வீட்டில் எங்கு இருக்கும் என்பதை அந்த ஒட்டு மொத்த குடும்பமே அறிந்திருக்கும். அன்றைய நாட்டு மருந்துகளின் மீது மக்களுக்கு இருந்த ஈடுபாடும் நம்பிக்கையுமே அதற்கு காரணம்.
மதுரை மேல மாசி வீதியில் பழைய உடுப்பி ஓட்டல் அருகே இது தயாரிக்கப்படுகிறது. இன்றும் மேலமாசி வீதியில் போத்திஸ்க்கு எதிரில் எப்பொழுது சென்றாலும் நான் ஆர்.எஸ்.பதி மருந்து நிறுவனத்தின் பெயர் பலகையை வாசிக்காமல் கடப்பதில்லை…
உங்கள் வீட்டில் ஆர்.எஸ்.பதி மருந்து இருந்த இடம் நினைவில் இருக்கிறதா..




