இன்றைய சிறுகதை.. அனுபவமே சிறந்த ஆசான்..!! அருமையான கதை.. படித்ததில் பிடித்தது..!!

பொன்னியின் கணவன் இறந்த பிறகு, குழந்தைகளை வளர்ப்பதற்காக நான்கு வீடுகளில் பாத்திரம் தேய்த்தும், துணி துவைத்தும் வாழ்க்கையை நடத்தி வந்தாள். பெரிய பெண் கமலா பத்தாவது படிக்கிறாள். சின்னவள் விமலா எட்டாம் வகுப்பு.
நன்கு படிப்பதுடன், அம்மாவிற்கு வீட்டு வேலைகளிலும் உதவி செய்வாள் கமலா. ஆனால் விமலாவோ எந்த வேலையும் செய்யாமல் சோம்பேறியாக இருப்பாள்
“கமலா, வர வர எனக்கும் அடிக்கடி உடம்பு சரியில்லாம போயிடுது. பத்தாவது படிக்கறதால நீயும் நிறைய படிக்க வேண்டி இருக்கும், ஆனா இந்த விமலா இப்படி சோம்பேறியாக இருக்கிறாளே, அவளை எப்படி திருத்துறதுன்னே புரியலயே” என்று கூறி வருத்தப்பட்டாள்.
மறுநாள் காலை 4 மணிக்கே பொன்னி வேலைக்குக் கிளம்பினாள்.
“பிள்ளைகளா, நேத்தே சொல்ல மறந்திட்டேன். எங்க முதலாளி வீட்ல இன்னைக்கு ஒரு விசேஷம். வேலைக்கு வரச் சொல்லி இருக்காங்க. அதனால நான் கெளம்பறேன். இன்னைக்கு லீவ்தானே. அதனால காலை டிபன், மதியம் சாப்பாடு நீங்களே செய்து சாப்பிடுங்க. நான் சாயந்தரம்தான் வருவேன்” என்று கூறி விட்டுச் சென்றாள்.
அம்மா சென்றபிறகு கமலா எழுந்து போய் கதவை சாத்திவிட்டு வந்து படுத்தாள்.
ஏழு மணியாகியும் கமலா எழுந்திருக்காமல் தூங்கிக் கொண்டு இருந்தாள். விமலாவிற்கோ ரொம்ப பசித்தது.
“ஏய், கமலா, டீ போட்டுக் குடு, எனக்கு ரொம்ப பசிக்குது” என்றாள் விமலா.
எதுவும் பேசாமல் படுத்துக்கொண்டு இருந்தாள் கமலா.
“என்ன கமலா, ஏன் எழுந்திருக்காமல் படுத்துக்கிட்டு இருக்க? எனக்கு ரொம்ப பசிக்குது “ என்றாள் விமலா.
“என்னன்னு தெரியல, ஒரே தலைவலியா இருக்கு, காய்ச்சல் அடிக்கற மாதிரி இருக்கு. என்னால எழுந்திருக்கவே முடியல” என்றாள் கமலா.
“அய்யோ, என்ன இப்படி சொல்ற, எனக்கு எதுவும் செஞ்சு பழக்கம் இல்லையே”
“ஏதாவது செய், என்னால கண்டிப்பா எழுந்திருக்க முடியாது”
“சரி, ஏதோ எனக்கு தெரிஞ்சத செய்றேன்” என்று சொல்லியபடியே சமையலறைக்குள் சென்றாள்.
இதுவரை பார்த்ததை வைத்து டீ போட்டு எடுத்து வந்து கமலாவிற்குக் கொடுத்து தானும் குடித்தாள். பிறகு தோசை செய்து, சட்னி அரைத்தாள். தெருக்குழாயில் குடி தண்ணீர் வருகிறது என்று சொல்லவே வெளியே போய் குடத்தில் தண்ணீர் பிடித்து வந்தாள்.
தெரிந்தவரை மதிய சாப்பாடு செய்தாள். அதற்குள்ளாகவே விமலாவிற்கு கை, கால் வலிப்பது போல் ஆகி விட்டது.
‘எப்படிதான் நம் அம்மா, நமக்கும் வேலை செய்து விட்டு பிற வீடுகளிலும் வேலை செய்கிறார்களோ? இவ்வளவு வேலைகள் செய்வதால் நம் அம்மாவிற்கு பெரிய நோய் ஏதாவது வந்து விட்டால் நாம் யாரிடம் போய் நிற்பது?
இனி கண்டிப்பாக நம்மால் முடிந்த சின்னச் சின்ன உதவிகளை நாம் செய்ய வேண்டும்’ என முடிவெடுத்தாள்.
அன்று மாலை அம்மா வருவதற்குள் எல்லா வேலைகளையும் முடித்து வைத்திருந்தாள். அம்மா வந்ததும் “மா, சமையல் சுமாரா தான் செய்திருக்கேன். கொஞ்சம் கொஞ்சமா நல்லா கத்துக்கறேன். இனி நானும் கமலாவும் நம்ம வீட்டு வேலையப் பார்த்துக்கறோம். நீ வேலைக்குப் போய்ட்டு வந்து வீட்ல ரெஸ்ட் எடு” என்றாள் விமலா.
பொன்னிக்கு ரொம்ப ஆச்சரியம். நிறைய வேலைகள் செய்யவே, சாப்பிட்டு முடித்ததும் களைப்பில் விமலா உடனே படுத்துத் தூங்கி விட்டாள்.
“என்ன கமலா, ரொம்ப ஆச்சரியமா இருக்கு” என்று கேட்டார் அம்மா.
“வேலை செய்யறது கஷ்டம் அப்படின்னு எத்தனை முறை சொன்னாலும் அவ புரிஞ்சிக்க மாட்டா. அதனாலதான் சும்மா தலை வலிக்கற மாதிரி நடிச்சேன். கஷ்டப்பட்டு அவளே எல்லா வேலையும் செய்ததால உன் கஷ்டம் புரிஞ்சிக்கிட்டா, எப்பவும் அனுபவமே சிறந்த ஆசிரியர்” என்று கூறிச் சிரித்தாள் கமலா.
தன் கஷ்டத்தை விமலாவும் புரிந்து கொண்டதை நினைத்து பொன்னி மகிழ்ச்சி அடைந்தாள்.
நீதி : பிறர் சொல்வதால் பெறுகின்ற அறிவை விட, செயல் வழியில் அனுபவத்தின் மூலம் பெறுகின்ற அறிவே என்றும் நிலைத்து நிற்கும்.

Read Previous

Diploma, Degree முடித்தவர்கள்..!! உதவித்தொகையுடன் தமிழக அரசில் வேலை..!! 1,588 பணியிடங்கள்..!!

Read Next

நடிகர் எஸ்.வி.சேகர் வீடு, பாஜக அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular