நமது வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு கேடு விளைவிக்கும் பொருட்களை நாம் ஒருபோதும் தர அனுமதிக்க மாட்டோம். அப்படித்தான் கடைகளில் விற்கும் சமோசாக்களை அதிகம் குழந்தைகளுக்கு கொடுப்பதை நாம் தவிர்த்து வருகிறோம். ஏனெனில் அதில் நன்மைகளை விட தீமைகள் தான் மிக அதிகமாக இருக்கிறது. ஆனால் குழந்தைகளுக்கோ அது மிகவும் பிடித்து உணவாகவும் இருக்கிறது. ஆகையால் வீட்டிலேயே சுவையான மற்றும் சத்தான கீரை சமோசாவை எப்படி செய்வதென்று இந்த பதிவில் காண்போம்.
தேவையானவை:
மைதா மாவு – 300 கிராம்,
நீங்கள் விரும்பும் கீரை – 2 கையளவு,
வெங்காயம் – 3,
பச்சை மிளகாய் – 4 (உங்களின் காரத்திற்கேற்ப),
முட்டை கோஸ், கேரட் துருவல் – 1 சிறிய பவுல்,
உருளைக்கிழங்கு – 3,
கரம் மசாலா, உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.
செய்முறை:
மைதா மாவுடன் தண்ணீர் முட்டை கொஞ்சம் சர்க்கரை மற்றும் உப்பு சேர்த்து கெட்டியாக பிசைந்து ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். கீரையை சுத்தம் செய்து சிறிதாக வெட்டி உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் நீக்கி மசித்து எடுத்துக் கொள்ளவும். பிறகு பச்சை மிளகாய் வெங்காயம் ஆகியவற்றை சிறிது சிறிதாக வெட்டி எடுத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து வெங்காயம் பச்சை மிளகாய் கீரை, கேரட் மற்றும் முட்டைக்கோஸ் துருவல் ஆகியவற்றை அடுத்தடுத்து சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். இவை அனைத்தும் வதங்கிய பின் உருளைக்கிழங்கை சேர்த்து மசாலா மற்றும் உப்பு சேர்த்து இறக்கி விடவும். மைதா மாவை சமோசாவை போல் வடிவமைத்து அதனுள் இந்த கலவையை போட்டு பொரித்து எடுக்கவும். அவ்வளவுதான் சுவையான மற்றும் சத்தான கீரை சமோசா தயார்.




