என்னை யாரும் தேடவேண்டாம் என்று எழுதப்பட்ட கடிதங்களைப் பார்த்திருக்கிறேன்.
அவை தோல்வியின் வார்த்தைகள்
அவை பிரிவின் வார்த்தைகள்
அவை துரோகத்தின் வார்த்தைகள்
ஏன் அவை மரணத்தின் வார்த்தையாகக் கூட இருக்கலாம்.
அதை எழுதிய நபரின் கரங்கள்தான் இந்த உலகத்தில் வலிமையானவையாக இருக்கக்கூடும்.
அந்த வார்த்தையில் ஒரு ரணம் இருந்தது பூவிதழில் ஏற்றப்பட்ட குண்டூசி போல மெல்லிய வலி இருந்தது.
அந்தக் கடிதம் ஒரு இரகசிய அறையில் வைத்தோ கண்ணீர் முட்டும் இரவிலோ துன்பம் வியர்க்கும் பகலிலோ எழுதப்பட்டிருக்கலாம்
அந்த நபரை இந்த வாழ்க்கை எவ்வளவு துரத்தியிருக்கும் எவ்வளவு பழி வாங்கியிருக்கும்
அவர் யாரையோ நம்பி கைகொடுத்து கைவிரல்களை தொலைத்தவராக இருக்கிறார்
அவர் தூங்கிக் கொண்டிருந்த போது மலையிலிருந்து தள்ளப்பட்டவராக இருக்கிறார்.
ஒருவர் எல்லோரும் கைவிடும்போது அனாதையாக்கப்படுவதில்லை அவர் நம்பியிருந்த நேசித்த ஒருவர் கைவிடும்போதே அவர் அனாதையாக உணர்கிறார்.
இன்றோ நாளையோ நாளை மறுநாளோ என்னை யாரும் தேட வேண்டாம் என்று தொடங்கும் கடிதம் உங்கள் கண்ணிலும் படக்கூடும்
கொஞ்சம் கவனியுங்கள் இப்பொழுதும் யாரோ ஒருவர் அனாதையாக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறார்.




