தவெகவின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் பிரைட்டர் மற்றும் கட்சி நிர்வாகிகள் சிலர் மீது அக்கட்சியைச் சேர்ந்த பெண் நிர்வாகி ஒருவர் பரபரப்பு புகார் அளித்துள்ளார். கட்சியில் முக்கிய பொறுப்பு வாங்கித் தருவதாக கூறி தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், தனக்கு ஆபாசமான படங்களை அனுப்பி மிரட்டியதாகவும், இதுதொடர்பான ஆதாரங்கள் இருந்த தனது செல்போனை பறித்துக்கொண்டதாகவும் அவர் புகாரில் தெரிவித்துள்ளார். தொடர்ந்து தங்களுக்கு எதிராக பேசினால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டல் விடுத்ததாக குற்றம்சாட்டியுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக கட்சி தலைமை மற்றும் அமைச்சர் ஸ்ரீநாத்திடம் புகார் அளித்ததாகவும், ஆனால் இதுவரை தன்னுடைய புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் அந்த பெண் நிர்வாகி வேதனை தெரிவித்துள்ளார்.
தனக்கு ஏற்பட்டதாக கூறப்படும் பாலியல் தொல்லை, மிரட்டல் உள்ளிட்ட புகார்கள் குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார். புகாரில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து சம்பந்தப்பட்ட தரப்பினரின் விளக்கமும், அதிகாரப்பூர்வ விசாரணை முடிவுகளும் வெளியாக வேண்டியுள்ளது.




