இது உளவியல் சார்ந்த பதில் .
1 . வெறுக்கவில்லை . கணவன் எதிர்பார்க்கும் அளவுக்கு விரும்பவில்லை / பாசம் இல்லை . கணவன் 25–30 ஆண்டுகள் தான் பார்த்து,தன்னை வளர்த்த குடும்பத்தின் மீது வைக்கும் அன்பு/ பற்றை , பார்த்து பழகிய 3 மாதத்தில் இன்னொருவர் அதே அளவு வைக்க வேண்டும் என்று எதிர்பார்த்தால் ,குறைவான பற்று வெறுப்பு போல் தெரியும். அதே போல் அந்த பெண் மீதும் குடும்பத்தினரால் கணவன் மீது காட்டும் அதே அளவு அன்பை காட்ட முடியாது .
2. பெண்குழந்தைகள் தங்கள் தாயின் துயரைத் தங்கள் தோளில் சுமக்கிறார்கள். தன்னுடைய தாயிக்கு அவரின் கணவன் குடும்பத்தில் நடந்த நிகழ்வுகளைக் கேட்டோ/ பார்த்தே வளரும் பிள்ளைகள் மனதில் , அது எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எழுத்தில் விளக்க முடியாது. அது பெண்களுக்கு மட்டுமே புரியும் . தாய் அவரின் புகுந்த வீட்டில் தன்மையாக நடத்தப்படாதது பெண் குழந்தைகளுக்கு post traumatic stress disorder ( PTSD)போன்ற பாதிப்பைத் தரும் . அது தங்கள் திருமணத்திற்கு பிறகு வெளிப்படையாக தெரியும்.
3. ஒரு செடியைப் பிடிங்கி புது இடத்தில் நடும் போது முதலில் கண்ணிற்கு தெரியாது வேர் ஓடும், அதன்பிறகு தான் மேலே புது இலைகள் வரும். வேர் ஓடும் காலத்தில் மிக கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும் . இல்லையெனில் செடி காய்ந்து போக / அதன் வாழ்நாள் முழுவதும் வளர்ச்சியில் / மகசூல் பாதிப்பு ஏற்படும் . அதே தான் பெண்களுக்கும் . திருமணமான புதிதில் நடத்தப்படும் விதம் 5/ 10 ஆண்டுகளுக்கு பின்னர் விளைவை ஏற்படுத்தும் . பெண்களுக்கு மறப்போம் மன்னிப்போம் மனது கிடையாது. மன்னித்தாலும் சாகும் வரை மறக்கமாட்டார்கள்.
4. ஆண் நண்பர்கள் 5 பேர் இருந்தால் தங்களுக்குள் உடைகளைப் பகிர்ந்து கொள்ளுதல் சாதாரணம் . ஆனால் பெரும்பாலான பெண் தோழிகள் அதை செய்ய மாட்டார்கள் . தன்னுடைய பொருள் ( sense of possession/ belonging) ஆண்களை விட மிகவும் அதிகம் . அது பல சூழ்நிலைகளில் உறவில் பாதுகாப்பின்மை ( insecurity) உணர்வை ஏற்படுத்தும் . ஆரம்ப காலங்களில் செயல் மூலமும் சொற்கள் மூலமும் அதை தடுத்து ” நான் உன்னுடையவன். உன்னைத் தாண்டி தான் உலகம்” என்று புரிய வைத்துக் கொண்டே இருந்தால் அது நீங்கி விடும் . அதை மேலும் கிளறி அதிகப்படுத்தி” என்னுடைய குடும்பம் ,அதுக்குப் பிறகு தான் நீ” என்றால் , தன்னுடைய பொருள் அடுத்தவர் கைகளில் என்ற எண்ணம் , தான் இரண்டாம் பட்சம் என்ற பாதுகாப்பின்மை வழுப்பெற்று வெறுப்பாக மாறும் . பெண்களைப் பொறுத்தவரை இது emotional infidelity (* கடுமையான வார்த்தையாக இருந்தாலும் ,உண்மை இதுதான்)
5 . நம் சமுதாயம் வழுவான ஆணாதிக்கத்தின் கட்டமைப்பு ( patriarchal / patrilineal ). அது தற்போது திருமண விசயத்தில் மெல்ல உடைய ஆரம்பித்து விட்டது . ஒரு திருமணம் நடந்தால் , ஒரு குடும்பத்தில் பெண் புதிதாக சேர்வது என்பது மாறி புதிதாக ஒரு குடும்பம் உருவாகிறது . இந்த மனநிலையில் இருக்கும் போது ,அதாவது இரண்டு வேறு வேறு குடும்பங்கள் ஒரே இடத்தில் வாழும் நிலையில் ஒரு குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இன்னொரு குடும்பம் இருக்கிறது . இதைப் பெண்களால் ஏற்றுக் கொள்ள இயலாது . புதிதாக ஒரு குடும்பம் என்பதை ஆணின் குடும்பத்தால் ஏற்றுக்கொள்ள முடியாதது சிறுசிறு பிரச்சனைகளை ஏற்படுத்தி பின்னர் வெறுப்பாகி விடுகிறது.
கோபம் கூட சில சமயங்களில் காரணமின்றி ஒருவர் மீது வரும் . ஆனால் தனி மனித வெறுப்பு , காரணமின்றி தோன்ற வாய்ப்பு இல்லை . காரணங்கள் உண்டு , அதைக் காண கண்கள் வேண்டும் .




