Oplus_131072
மிகச்சிறிய திகில் கதை :
கருப்பு நிறம்!
அவ்வளவு துக்கத்திலும் உடல் அசதி அவளை மிகவும் சோர்வடையச் செய்திருந்தது. பின்னிரவு ஆகியிருந்த நேரத்தைக் கவனித்த வண்ணம், மெத்தையின் மீது சாய்ந்தவாறு அமர்ந்தாள் கீர்த்தி!
கீழ்த்தளத்தில் வசித்திருந்த தோழி மின்சாரம் தாக்கி இறந்துபோன செய்தியினை இன்னமும் அவளால் நம்ப முடியவில்லை.
‘நேற்று கூட அவளின் கணவனை அலுவலகம் அனுப்பி, வேலையெல்லாம் முடித்து வாடிக்கையாக காலை சிற்றுண்டியினை புசிக்க நம் வீட்டிற்கு வந்து, அந்த ‘சோஃபா’வில் அமர்ந்து கதைகள் பேசினோமே! இன்று அவள் பூதவுடல் இறுதியாக எரியூட்டப்பட்டுவிட்டது. அவள் இனி இல்லை!’ இப்படி நினைக்கையில் காலையிலிருந்து அவளின் சொந்தங்களுடன் துக்கத்தில் கலந்து அழுது தீர்த்திருந்தாலும், கீர்த்தியின் கண்கள் கண்ணீரினை வெளித்தள்ளாமலில்லை!
தோழியுடனான பல நினைவலைகளின் மத்தியில், அயல்நாட்டில் வேலை செய்திருந்த கணவனின் தொலைபேசி அழைப்பு அவளை இந்த உலகிற்குக் கொண்டுவந்தது. காலையிலிருந்து தோழியின் வீட்டில் தாம் அநேக உதவிகள் செய்து மிகவும் சோர்வுற்று இருப்பதாகக் கூறியவள், அவரின் உணவு மற்றும் வேலையின் நிலையினை மட்டும் கேட்டுவிட்டு மீண்டும் அழத்துவங்கினாள்.
அவளிடம் பேசிய கணவனும் பணிச்சுமைக்கிடையில் சிறிது நேரமெடுத்து, கீர்த்திக்கு ஆறுதலும் தைரியமும் தந்துவிட்டு துண்டித்த போது, வீட்டில் ஒரு ஆழ்ந்த நிசப்தம் நிலவியதைக் கவனித்தாள்.
வெளிநாட்டில் ‘செட்டில்’ ஆக முயன்ற இருவரும் குழந்தை கூட வெளிநாட்டில் செட்டில் ஆகி பெற்றுக்கொள்ள வாழ்க்கைத் திட்டம் தீட்டியது எவ்வளவு தவறென்று உணர்ந்தாள் கீர்த்தி. ‘குழந்தை என்ற ஒன்று இருந்திருந்தால் தனிமை என்ற நிலையேனும் இல்லாது இருந்திருக்கும்!’ என்று பெருமூச்சு விட்டவள், சமையலறைக்கு எழுந்து சென்று குளிர்சதனப் பெட்டியிலிருந்து நீர் எடுத்துப் பருகினாள். குடித்துக்கொண்டே சமயலறையினை நோட்டம் விட்டவள், நேற்றைய வேலைகள் சரிவர முடிக்காமல் பாத்திரங்கள் அப்படியே கிடப்பதைக் கண்டாள். மனம் ‘அவ்வேலையினையும் முடித்துவிடு’ என்றாலும், உடல் விடுவதாய் இல்லை.
திடீரென்று வீட்டின் அழைப்பு மணி துடிக்க, பயந்துவிட்டாள். ஆசுவாசப் படுத்திக்கொண்டவள், கதவைத் திறந்து பார்த்தாள் இறந்து போன தோழியின் தாயார்.
“என்னம்மா? சொல்லுங்க!” என்றாள் கீர்த்தி.
“இல்லையம்மா! வெளியூரில் இருந்து நிறைய பேர் வந்திருக்கின்றனர். ‘காஃபி’ தூள் தீர்ந்துவிட்டது. உன்னிடம் வாங்கிக்கொண்டு, அப்படியே காலையில் இருந்து நீ, அங்கும் இங்கும் ஓடியாடி எங்களுக்கு உதவி செய்ததற்கு நன்றி சொல்லிவிட்டுப் போகலாம் என்று வந்தேன்” என்றார் தோழியின் தாயார்.
“பரவாயில்லை அம்மா! இதைக் கூடச் செய்யாமல் என்ன அக்கம் பக்கம்!!” என்றவள் அவரை உள்ளே அழைத்துவிட்டு, சமயலறையிலிருந்து கொண்டுவந்து அவரிடம் கொடுத்தாள்.
“அவளின் இரண்டாம் குழந்தை எப்போது என்று நேற்றுதான் கேட்டேன். கணவருக்கும் இந்த வருடம் விருப்பம் இருப்பதாய்க் கூறினாள். அதற்குள் இப்படியாகிவிட்டது!” என்று அழுதவண்ணம் சொல்லிக்கொண்டே கீர்த்தியிடம் சிறிதுநேரம் புளம்பினார். அவருக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்த கீர்த்திக்கோ, உடல் அசதி அவளை நித்திரையின் வாசலில் நிறுத்தியிருந்தது.
தெய்வாதீனமாக, அவரே கிளம்பிவிட்டார். மீண்டும் மெத்தைமீது உடலினைத் தூக்கிப் போட்டாள். போர்வையினை இழுத்துப் போர்த்தவும் அசதியாக உணர்ந்தவள் அப்படியே தூங்கப்போனாள்.
முழுத்தூக்கம் தழுவும் முன், ஏதோ சத்தம் கேட்டு முகம் சுழித்தாள். மீண்டும் மீண்டும் அந்த சத்தம் அவளை மிகவும் எரிச்சலூட்டியது. எப்படியோ உடலில் இருந்த அனைத்து சக்தியினையும் பயன்படுத்தி எழ முயற்சித்தவளுக்கு, ‘டமார்…’ என்று பாத்திரம் விழுந்த பெரும் சத்தம் கேட்டது. இதைக் கேட்ட கீர்த்தியும் அலறினாள். அவளின் பயம் எவ்வளவு என்று முகத்தில் பூத்திருந்த வெள்ளி முத்துக்கள் காட்டின.
மனதில் ஒருவித பயம் கலந்த உணர்வு படர்ந்திருக்க, மெதுவாக கட்டிலின் மீதிருந்து கீழே காலினை வைத்தாள். தரை மிகவும் குளிர்ந்து இருந்ததை அப்போதே உணர்ந்தாள். இவ்வளவு குளிர்ச்சி ஏன்? குளிரூட்டியும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததைக் கவனித்தாள் கீர்த்தி. அந்த நொடி தான் அறையே மிகவும் குளிராக இருந்ததை உணர்ந்தாள்.
மெதுவாக அவள் சமலறை வரை சென்று எட்டிப்பார்த்தாள். அப்போது தான் உருண்டு அடங்கியிருந்த பாத்திரங்கள் இரண்டு கீழே கிடந்தன. அறையினை நோட்டம் விட்டவள், ஏதுமில்லை என்ற தெரிந்து மேலும் பயந்தாள். அவளுக்குப் பின்னாள் யாரோ நிற்பது போன்று உணர்ந்தவள், மெதுவாகத் பார்வையுடன் தலையினைத் திருப்பினாள். அங்கே யாருமற்ற இருள் மட்டுமே இந்தது.
திடீரென்று படுக்கையறையின் கதவு முனகும் ‘கீச்ச்ச்ச்ச்ச்ச்…’ சத்தம் கேட்டது. அந்தச் சத்தம் இவளின் அனைத்து நாடி நரம்புகளையும் ஒடுக்கியது. தன்னைச் சுற்றி என்னவோ இருப்பதாய் உணர்ந்தாள்; குளிரும் அதிகரித்தது. மெதுவாக படுக்கையறையின் கதவினை மேலும் திறந்தவள், தன்னுடைய போர்வை தரையில் விழுந்தும், படுக்கை கலைந்தும் இருப்பதைக் கண்டவளுக்கு மூச்சே நின்றுவிட்டது. உள்ளே நுழைய மிகுந்த பயம் கொண்டாள். அங்கே மங்கலான இரவு நேர விளக்கில் ஏதோ ஒரு பெருத்த உருவம் தெரிந்தது.
அடித்துத் தூக்கினாற் போல் அவள் இதயம் துடித்தது. வாயினைப் பொத்திக்கொண்டவள், யாரையாவது அழைக்கலாம் என்று எண்ணினாள். ஆனால், கணவனை அழைக்க தொலைபேசி கட்டிலின் மீதுள்ளது? பக்கத்து வீட்டிற்குச் செல்லலாம் என்று நினைத்துக் கொண்டு கதவறுகே செல்ல, மெதுவாகக் காலடி வைத்தவளுக்குத் தன் தோழியின் குரல் கேட்டது.
“கீர்த்தி! என்னடி என்னை எரித்துவிட்டார்கள்? உடலெல்லாம் ஒரே எரிச்சலாக இருக்கின்றது! என்னைக் கொஞ்சம் பாரடி!! உடலெல்லாம் தீக்காயங்கள்” என்றது அந்தக் குரல்.
அறையில் மீண்டும் நிசப்தம் நிலவியது. அவளுக்குத் திரும்ப மனமில்லை. பயம் அவளை இப்போது முழுதாய் ஆட்கொண்டிருந்தது. சத்தமிட்டு வந்த அழுகையினையும் அவள் வாயினைப் பொத்தியதால் உள்ளேயே அடங்கி, கண்களில் வழிந்த நீர்த்துளிகள் மட்டும் கைகளை நனைத்தது. அவளுக்கு, அவள் மூச்சு விடுவதே பெரும் சத்தமாகக் கேட்டது.
மீண்டும் மெதுவாக கதவினை நோக்கி, அடியெடுக்க காலினை நகர்த்தியவளுக்கு,
“என்ன கீர்த்தி? என்னை விட்டுப் போகிறாய்! அப்படியென்ன நான் கெட்டவளா? நீ என்னுடைய தோழி தானே. என்னுடைய துன்பத்தில் பங்கெடுக்கக் கூடாதா? வா உள்ளே வா. என்னால் நகர முடியவில்லை. வலிக்கிறது! உடலெங்கும் எரிகிறது!! கொஞ்சம் தண்னீர் கொடு. மிகவும் தாகமாக இருக்கின்றது” என்றது அந்தக் கரகரவென்று மாறியிருந்த தோழியின் குரல்.
இவளுக்கு துக்கமும் அழுகையும் அதிகரித்தது. கதவருகே செல்ல எத்தனித்திருந்த அவளின் உடல் அவளே அறியாமல், படுக்கையறை நோக்கித் திரும்பியது. ஆனாலும் அவளுக்கு அங்கே செல்ல விருப்பமில்லை. உடல் இவள் கட்டுப்பாட்டில் இல்லாதது போல் எதுவோ ஒன்று அவளை படுக்கையறையின்பால் இழுத்தது.
மூச்சே நின்றுவிடும் போல் கத்தினாள் கீர்த்தி. யாரேனும் அக்கம் பக்கத்தினர் உதவுவார் என்ற ஆசை நிராசையாகவே தோன்றியது. கத்தியதற்குப் பலன் ஏதுமில்லை. யாரும் வந்து கதவினை உடைக்கவோ, வீட்டின் முன் வந்து நிற்கவோ கூட இல்லை. அவள் கத்திக்கொண்டிருக்க…
“ஏய்! நிறுத்து” என்று கணத்த கரகரவென இருந்த அதே குரல், இப்போது கோபமாய்.
இவளின் சப்த நாடியும் ஒடுங்கியது. அப்படியே நிலைகுலைந்து கீழே சரிந்தாள். மெலிதாக பூத்திருந்த இமைகளினூடே தெரிந்த மங்கலான உருவம் ஒன்று அவளருகே காற்றில் வருவதைப் போல உணர்ந்தாள் கீர்த்தி; மூர்ச்சையுற்றாள்!
மறுநாள், தனக்கு ஏற்பட்டதை கணவனுடன் பகிர்ந்தாள். கணவனோ, அவள் உனக்கு நெருங்கிய தோழி. அவள் பகல் நேரமாகி வீட்டிற்கு வராததால் நேரில் சென்று பார்த்தபோது இறந்ததையே முதலில் நீ தான் பார்த்தாய். மேலும் அவள் விழி திறந்து இருந்தது உனக்குள் ஒரு ‘கிலி’ ஏற்படுத்தியிருக்கும். மேலும் நேற்று அதிகப்படியான வேலை, உடல் சோர்வு வேறு; திடீரெனத் தொலைந்த தோழமை, என இவையெல்லாம் சேர்ந்து உனக்கு இப்படி பிரமை ஏற்படுத்தியிருக்கின்றது. இவ்வாறு இவளுக்கு ஆறுதல் கூறித் தேற்றினான். கீர்த்தியும் ஒருவாறு தேறினாள்; மன தைரியம் கொண்டாள்!
தொலைபேசி இணைப்பைத் துண்டித்தவன் முதல் வேலையாக தன் முகத்தில் முளைத்திருந்த வியர்வையைத் துடைத்தான். துடைத்தவன் கைகள் மோசமாய் நடுங்கியது. கணநேரச் சிந்தனைக்குப் பின், தன் அன்னையை அழைத்து, மனைவியிடம் ஏதும் கேட்காமல், உடனே அவளிடம் செல்லுமாறு கட்டளையிட்டான். நண்பன் ஒருவனை உதவிக்கு அழைத்தான். ஊருக்கு வர துரித பயணச்சீட்டு முறையில் விமானத்தில் பதிவு செய்தான். மனைவியை நினைத்து அழுதுகொண்டே, மிகவும் துரிதமாகச் செயல்பட்டான்.
காரணம்,
காணொளி அழைப்பில் பேசும் போது அவளுக்குப் பின்னால் நின்ற கருப்பு நிற உருவம்!




