கரூர் மாவட்டம் குளித்தலை பகுதியில் சன் தொலைக்காட்சியில் செய்தியாளராக பணியாற்றி வருபவர் சிவா. கடந்த இரு தினங்களுக்கு முன்பு குளித்தலை பேருந்து நிலையம் அருகே காஞ்சா போதையில் இருந்த நான்கு பேர் முன் விரோதம் காரணமாக திடீரென செய்தியாளர் சிவாவை வழிமறித்து தாக்குதல் நடத்தி அவரிடம் இருந்த செல்போன் மற்றும் பணத்தை பறித்தனர். இந்த சம்பவத்தில் காயம் அடைந்த செய்தியாளர் சிவாவை குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். காவல்துறையினர் சிவாவிடம் வாக்குமூலம் பெற்று அதனை புகாராக பதிவு செய்து சம்பந்தப்பட்ட 4 நபர்களில் 3 பேரை கைது செய்தனர். முக்கிய குற்றவாளி தேடி வருகின்றனர்.
தமிழகத்தில் தொடர்ந்து செய்தியாளர்கள் தாக்கப்படுவது தொடர்கதை ஆவதை தடுக்கும் வகையில் நேற்று மாலை கரூர் தலைமை தபால் நிலையம் முன்பு தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்க மேற்கு மாவட்ட தலைவர் சம்பத்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கம், கரூர் பத்திரிக்கையாளர் சங்கம், தமிழ்நாடு உழைக்கும் பத்திரிக்கையாளர் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் சுமார் 30க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு குற்ற செயலை செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், பத்திரிகையாளர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க தமிழக அரசை வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பினர்.




