கறை குற்றமல்ல – கரை தேடும் பெண்கள்
காலையில் எழுந்ததும், சிறுநீர் கழிக்கவோ மலம் கழிக்கவோ நாம் கழிவறைக்கு விரைகிறோம். அது மூளை கட்டளையிடும் செயல். ஆனால் எந்தக் கட்டளையுமின்றி, இயல்பாகவே வெளியேறுவது தான் மாதவிடாய்.
ஒவ்வொரு மாதத்திலும் வரும் என்று பெண்களுக்கு முன்கூட்டியே தெரிந்தாலும், எந்த நேரத்தில் வரும் என்பது யாருக்கும் தெரியாது. சிலருக்கு சொல்லி வைத்தாற்போல் நேரத்தில் வருவதில்லை. முன்போக்கில் சில நாட்கள் முன்போ, பின்போ வரலாம். பழைய காலத்தில் பெண்கள் பெரும்பாலும் வீட்டைவிட்டுச் செல்லாதவர்கள். அந்தக் காலத்தில் பழைய துணியை வைத்துக் கொண்டு ஓரளவுக்கு கறை தவிர்த்துக் கொண்டார்கள்.
ஆனால் இப்போது பெண்கள் வீட்டு வாசலைத் தாண்டி கல்வி, வேலை, பயணம் என எப்போதும் அலைந்து கொண்டிருக்கிறார்கள். எப்போதும் ஹேண்ட்பேக்கில் நாப்கின் வைத்திருக்க வேண்டிய கட்டாயம் உண்டு. இல்லாவிட்டாலும், நம்மிடம் நெருக்கமாக இருப்பவர் அவசரத்தில் கேட்டால் கொடுக்கவாவது இருக்க வேண்டும் என்பதே பெண்கள் அனைவரின் அனுபவம்.
ஆனால், நாப்கின் இல்லாத சூழலில் ஆடையில் கறை படிவது உலகமகா குற்றமா? நாப்கின் வைத்திருந்தாலுமே அதிக உதிரப்போக்கால் கறை படுவது சாதாரணமே.
என்றாலும், விளம்பரங்கள் என்ன சொல்கின்றன?
ப்ளூ இன்க் ஊற்றி காட்டி, “கறை என்பது அவமானம்” என்ற செய்தியைத் திணிக்கின்றன.
“8 மணி நேரம் பாதுகாப்பு” என்று சொல்வதன் மூலம் பெண்களின் உடல்நலனைப் பொருட்படுத்தாமல் வியாபாரம் செய்கின்றன. உண்மையில், உயிர் திரவம் ஒரு சிறிய நாப்கினில் நீண்ட நேரம் தேங்கினால் உடலுக்கு எவ்வளவு பாதிப்பு என யோசிக்கிறோமா?
மேலும், “நாப்கின் இருந்தால்
குதிரையில் சவாரி செய்யலாம், ஓட்டப்பந்தயத்தில் ஓடலாம்,
வெற்றி கோப்பையோடு திரும்பலாம்”
என்ற போலிக் கற்பனைகளை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன.
ஆனால் பள்ளிகளில் என்ன நடக்கிறது?
7-ஆம் வகுப்பிலேயே பல மாணவிகள் வயதுக்கு வருகிறார்கள். ஆனால் இன்னும் மாதவிடாய் விழிப்புணர்வு இருபாலருக்கும் சொல்லித் தரப்படுவதில்லை.
“மிஸ் அடிக்கடி பாத்ரூம் போக விடமாட்டேங்குறாங்க. பாய்ஸ் வேற பேக் ரோவுல இருக்காங்க” என்னும் மகளிடம் எவ்வளவு புரிதலை ஏற்படுத்தினாலும்
“மிஸ்… பாய்ஸ்” என்ற இரண்டு வார்த்தைகளுக்குள் மாணவிகள் தயக்கம் காட்டித் தவிக்கிறார்கள். சில சமயம் அவமானம், கிண்டல், பயம் ஆகியவை சேர்ந்து தற்கொலைக்கும் வழிவகுக்கின்றன.
நீங்கள் சந்திக்கும் தோழியோ, சகோதரியோ கறையுடன் நடந்து சென்றால், நாப்கின் தேவையா என்று கேட்டு உதவி செய்யாமல் இருந்தாலும் பரவாயில்லை. ஆனால், ஆனால் பின்னால் கிசுகிசுத்தால் அதைவிட பெரிய தீங்கு எதுவும் இல்லை.
பெண்களுக்கு பயமெல்லாம் கறை மீது அல்ல.
கரை சேர முடியாமல் சமூகமே கட்டவிழ்த்து நிறுத்தும் காரணங்களே நிஜப் பயம்.
மாதவிடாய் குறித்து சமூகம் இன்னும் தவறாகப் பார்ப்பதை மாற்ற வேண்டிய நேரம் இது.
அவமானமல்ல, இயல்பு.




