கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் புதிய பயனாளிகளுக்கான முக்கிய அப்டேட் வெளிவந்துள்ளது.
இத்திட்டத்தில் இன்னும் பல பெண்கள் விண்ணப்பித்துக் கொண்டிருக்கின்றனர். தினசரி நடைபெறும் “உங்களுடன் ஸ்டாலின் முகாம்” நிகழ்விலும் தகுதியானவர்கள் மனுக்கள் அளித்து வருகின்றனர். இதற்கான விண்ணப்ப கால அவகாசம் நவம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு ஏற்கனவே விண்ணப்பித்தவர்களின் மனுக்களை தேதி வாரியாக பிரித்து பரிசீலித்து வருகிறது. ரேஷன் கார்டு புதிய விண்ணப்பங்கள் எவ்வாறு பகுதி பகுதியாக ஒப்புதல் பெறுகின்றனவோ அதே நடைமுறையே இத்திட்டத்திலும் பின்பற்றப்படுகிறது.
அதன்படி, முதலில் சமர்ப்பிக்கப்பட்ட மனுக்கள் முதன்மையாக பரிசீலிக்கப்படுகின்றன. நவம்பர் மாதம் வரை பெறப்படும் விண்ணப்பங்கள் அனைத்தும் தகுதி உறுதிப்படுத்தப்பட்டு இறுதி பட்டியலாக உருவாக்கப்படும்.
புதிய பயனாளிகளின் இறுதி பட்டியல் உருவான பின், அனைவருக்கும் ஒரே நேரத்தில் தகவல் தெரிவிக்கப்படும். அதன்பின் தகுதியான பெண்களுக்கு ரூ.1000 மாதாந்திர உதவித்தொகை வழங்கப்படும்.
இதை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் பரிசாக அரசு அறிவிக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது. சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூட, புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு இன்னும் ஒரிரு மாதங்களில் நல்ல செய்தி வரும் என தெரிவித்துள்ளார்.




