படித்ததில் பிடித்தது..!! கிராமத்து வாழ்க்கையில் மட்டுமே கிடைக்கும் விஷயங்கள் எவை?
1 . போக்குவரத்து நெரிசல்/ போக்குவரத்தே இல்லாத சாலைகள். ஜாலியா நடுரோட்டில் நடந்து போலாம்.
2 . மலிவு விலை காய்கறிகள் . வாழை முறிந்து விட்டது என்று / தார் பழுத்து விட்டது என்று வாழைப்பழம் / வேலியில் படர்ந்து காய் பிடித்த புடலை , பாகற்காய் , ஓரக்காலில் வைத்த தக்காளி , பச்சைமிளகாய் , வெண்டைக்காய் எல்லாம் 10/20 ரூபாய்க்கு தாராளமாக கிடைக்கும்.
3 . சத்தம் , மாசு இல்லாத சூழல் .
4 . பேருந்து நிறுத்தத்தில் இறங்கி பக்கத்து கடையில்” பை கணம் . வீட்டில் இருந்து வந்து எடுத்துக்குவாங்க” னு பையை வைத்துவிட்டு வரும் கடைகள்.
5 . சாயம் போன புடவை / சுடிதார் , கிழிவதற்கு முந்தைய நிலையில் இருக்கும் சட்டைகள், எந்த ஒப்பனையும் இல்லாமல் சாதாரணமாக அவரவர் நிறத்தில் இருக்கும் மக்கள் .
6 . பேருந்து நிறுத்தத்தில் இறங்கி பேந்த பேந்த முழித்தால்” இதாரு ஊட்டுக்கு ஒரம்பரைக்கு வந்தீங்க?” என்று தானாக வந்து வழி சொல்லும் வாலண்டீர்ஸ்.
7. வெளியூரில் இருந்து ஊருக்கு போனால் வீட்டுக்கு போவதற்குள் நடுவழியில் கேட் போட்டு ” இப்பத்தான் வரீங்களா சாமி? இப்படி எளச்சு போனீங்க..” என்று வெசனப்படும் நலன்விரும்பிகள்.
8. சைக்கிள் . சைக்கிள் என்றால் பிங்க் நிற லேடிபேர்ட்/ கருப்பு நிற ஹீரோ இல்லை. பெரிய சக்கரங்களை கொண்ட உயரமான பார் வைத்த துருபிடித்த சைக்கிள்கள், அதில் மண்வெட்டி/ கடப்பாரை+ அரிவாள் உடன் ஒயர் பையை மாட்டிக்கொண்டு மில்/ விவசாயி வேலைக்கு போகும் ஆண்கள்.
9. பாதுகாப்பு. எந்த நேரத்தில் போனாலும் தெருநாயைத் தவிர வேறு பிரச்சினை இல்லை . ” வா சாமி ஊட்டுல விடறேன்” என்ற அன்பான அழைப்புகள் .
10. இலவசமாக நல்ல குடிநீர் , நல்ல பால் , இலவசமாக பூக்கள் கிடைக்கும்..




