குழந்தை இல்லா பெண்ணின் கதறல்…
மாதத்தின் மூன்று நாட்களின் போது ஒரு சில நாட்கள் தள்ளிப் போனாலும் நீ தான் வந்திருக்கிறாயோ என சந்தோஷத்தில் பொங்குகிறேன்…
பாவாடை நாடாவை கூட வலிக்குமோ என்று தளர்வாய் கட்டி வழுக்கி விடாதபடி அவ்வப்பொழுது பிடித்துக் கொள்கிறேன்…
காட்டன் புடவைகளைத் தவிர எதையும் கட்டுவதில்லை வெப்பத்தில் நீ கலைந்து விடுவாயோ எனப் பயந்து…
கலவி என்பதே மனதையும் உடலையும் ஒருமிக்க செய்யும் ஒருவித தியானம் போன்ற மெய்மறந்த உணர்வு தான்,
அந்த உணர்வின் சுகத்திற்கு கூட அடிமையாகாமல் நீ உருவாகியிருப்பாயோ இந்நேரம் என்று தான் எனக்குள் நானே எதிர்ப்பார்த்துக் கொண்டு இருப்பேன்…
என் வயிற்றுத் தொப்புள்
என் தாயை நினைவுப்படுத்துகிறது,
நான் தாயாகாமல் இருப்பதையும் நினைவுப்படுத்துகிறது…
உணவால் மட்டுமே இந்த வயிறு நிரம்பிக் கொண்டு இருக்கிறது,
உன்னால் நிரம்ப வேண்டும்
வா என் கண்மணியே…
உணவைச் சுமந்தது போதும்
உன்னைச் சுமக்க வேண்டும்
வா எங்கே இருக்கிறாய்!?
அம்மா என்று யார் அழைத்தாலும் உன் ஞாபகம் தான் வருகிறது…
நாற்பதை நெருங்க நெருங்க நாடி நரம்பெல்லாம் படபடக்கிறது…
உன்னைச் சுமக்க முடியாத என்னை ஏன் சுமந்தாய் என்று என் தாய் மீது கோபம் வருகிறது…
என் வலியை என் தாய்க்கு நான் தரவில்லை என்று சந்தோஷப்படுகிறேன்…
என் பிள்ளை தானே நீ,
நீயும் நீயில்லாத வலியை
உன் தாய்க்கு தந்து விடாதே…
இதயத்தை இயங்கச் செய்யும் கடைசி கொஞ்ச ரத்தம் இருக்கமென்றாலும் அதில் கூட கருமுட்டை உருவாக்கித் தான் உனக்காக காத்திருப்பேன்…
எங்கே இருக்கிறாய் வந்துவிடு என் செல்லமே √




