Oplus_131072
தலைதிவசம் கொடுப்பதற்கு முன் வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடத்துவது சரிதானா?
சரியில்லை. இறந்தவருடைய ஆத்மா பித்ருலோகத்தினைச் சென்றடைய ஒருவருட காலம் பிடிக்கிறது. தாய் அல்லது தந்தை எவரேனும் இறந்துவிட்டால், ஒரு வருட காலத்திற்கு எந்த சுபநிகழ்ச்சிகளையும் செய்வதில்லை. தீபாவளி, பொங்கல் உள்பட எந்தப் பண்டிகைகளையும் தலைதிவசம் முடியும் வரை கொண்டாடுவதில்லை. இறந்தவர்களின் நினைவாகவே இந்த ஒரு வருட காலமும் இருக்க வேண்டும் என்பதே இதற்குப் பொருள். ஆனால், இதில் சில விதிவிலக்குகளும் உண்டு. இறப்பு நிகழ்வதற்கு முன்னரே நிச்சயிக்கப்பட்ட திருமணத்திற்கு இந்த விதி பொருந்தாது. அதே போல, திருமணத்திற்காகக் காத்திருக்கும் பெண் பிள்ளைகளுக்கும் தலைதிவசம் கொடுப்பதற்கு முன்பாக திருமணத்தை நடத்தலாம். பிரம்மச்சாரியாக இருக்கும் ஒருவனின் தாயோ அல்லது தந்தையோ இறந்துவிட்டால், அவன் திருமணம் செய்துகொண்டு தம்பதியராக இணைந்து தலைதிவசம் கொடுப்பதும் குடும்பத்திற்கு நல்லது.
ஆயுஷ்ய ஹோமம், சஷ்டி அப்தபூர்த்தி முதலான சாந்தி கர்மாக்களையும் செய்யலாம். இதனைத் தவிர்த்து கிரஹப்ரவேசம், குலதெய்வ வழிபாடு, காதுகுத்தல் உட்பட மற்ற சுபநிகழ்ச்சிகள் அனைத்தையும் தலைதிவசம் முடியும் வரை தவிர்க்க வேண்டியது அவசியம். அதே நேரத்தில், இறப்பு நிகழ்ந்த 16 நாட்களுக்குள் அதாவது, கரும காரியங்களைச் செய்து முடிக்கும் வரை எந்த ஒரு சுபநிகழ்ச்சியும் பங்காளிகள் உட்பட எவர் வீட்டிலும் செய்யக் கூடாது.




