Oplus_131072
பிறந்த குழந்தைக்கு கிடைக்க வேண்டிய முதல் உணவு தாய்ப்பால். இன்றைய தலைமுறையினர் பெண்களுக்கு தேவையான ஊட்டச்சத்து இல்லாததன் காரணமாக தாய்ப்பால் போதியளவில் வருவதில்லை. இதனால் பிறந்த குழந்தைகளுக்கு தாய்ப்பால் இன்றி வளரும் நிலை ஏற்படுகிறது. இதனிடையே,
தாய்ப்பாலின் அவசியத்தை வலியுறுத்தி ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை உலக தாய்ப்பால் வாரம் கடைபிடிக்கப்படுகிறது. அந்தவகையில், பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்தும் வகையில், ஆண்டுதோறும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின் மூலம் ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் தாய்ப்பால் வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தாண்டு, தாய்ப்பால் ஊட்டுவதற்கு முன்னுரிமை அளிப்போம் என்ற அடிப்படையில் இந்த வார விழா கடைபிடிக்கப்படுகிறது என ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் மனோ சித்ரா தெரிவித்தார்.
தாய்ப்பால் வாரம் என்பது பாலூட்டும் தாய்மார்கள் குழந்தைகளுக்கு எப்படி பால் கொடுக்க வேண்டும், மற்ற குழந்தைகளுக்கும் தாய்ப்பால் தானம் பற்றிய விழிப்புணர்வு, பாலூட்டும் தாய்மார்களின் மனநிலை சரி செய்தல், எந்த மாதிரியான உணவுகளை உட்கொள்ள வேண்டும் என பல அறிவுரைகள் மற்றும் விழிப்புணர்வுகளை தாய்மார்களுக்கு ஏற்படுத்தி வருவதற்காகவே இந்த தாய்ப்பால் வாரம் கடைபிடிக்கப்படுவதாக மனோ சித்ரா தெரிவித்தார்.
அதற்குக் காரணம் தாய்மார்களுக்கு ஏற்பட்டுள்ள உணவு பற்றாக்குறைதான். ஆகையால் தான் போதிய பால் கிடைக்கவில்லை என தாய்மார்கள் கவலை அடைந்துள்ளார்கள். இதனை சரி செய்ய தாய்மார்கள் கர்ப்ப காலத்துக்கு முன்பும் குழந்தை பிறந்த பின்பும் நல்ல ஊட்டச்சத்து உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
தாய்மார்கள் கட்டாயமாக எடுத்துக் கொள்ள வேண்டிய உணவு வகைகள்: பூண்டு, வெந்தயம், காய்கறி, நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகள், கருவாடு, மீன் வகைகள், குறிப்பாக பால் சுறா, கீரைகள், பழங்கள், சுவரொட்டி என அனைத்து உணவுகளையும் தாய்மார்கள் உட்கொள்ள வேண்டும். நல்ல உணவுகளே தாய்மார்களுக்கு தேவையான அனைத்து விதமான சத்துக்களையும் தந்துவிடும் எனவும் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் மனோ சித்ரா தெரிவித்தார்.
குறிப்பாக குழந்தைகள் நன்றாக எவ்வளவு நேரம் பால் குடிக்கிறார்களோ அந்த அளவிற்கு தாய்மார்களுக்கு பால் சுரக்கும். குறைந்தபட்சம் தாய்மார்கள் 20 நிமிடம் வரை குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டும். குழந்தைகளின் மார்பகத்துடன் நன்றாக அணைத்து, மார்பகத்தின் கருவளையம் முழுவதும் குழந்தை வாயில் இருப்பது போன்ற அமர்ந்த நிலையில் தாய்மார்கள் பால் கொடுப்பது சிறந்த முறையாகும். தாய்மார்கள் 6 மாதங்கள் முதல் 2 வயது வரை தாய்ப்பாலுடன் இணை உணவு அளிக்கலாம். ஆக்ஸிடோசின் (Oxytocin) ஹார்மோன் தான் தாய்ப்பாலானது, பால் சுரப்பிகளில் இருந்து வெளிவருவதற்கு காரணம். எனவே 20 நிமிடம் தாய்மார்கள் கண்டிப்பாக குழந்தைக்கு பாலூட்ட வேண்டும்.
குறிப்பாக, குழந்தை பிறந்தவுடன் தாயிடம் இருந்து வெளிப்படும் பாலுக்கு கொலஸ்ட்ரம் என்று பெயர். ஆனால், அந்த பால் சேராது என சிலர் தவிர்ப்பார்கள். அவ்வாறு தவிர்க்கக் கூடாது. அந்த பாலில்தான் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளது. புரோட்டீன், கொழுப்பு அதிகம் இருப்பதால் மஞ்சள் நிறத்தில், சற்று அடர்த்தியாக அந்த பால் இருக்கும். அளவு குறைவாக சுரக்கும் இந்த பால்தான் குழந்தைக்கு கொடுக்கக் கூடிய முதல் தடுப்பு மருந்து என குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் மனோ சித்ரா தெரிவித்தார். எனவே, குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்தில் அந்த பாலை கொடுக்க வேண்டும் என தெரிவித்தார்.




