சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தாலுகாவிற்கு உட்பட்ட தெ.புதுக்கோட்டை கிராமத்தில் நள்ளிரவில் அடையாளம் தெரியாத 6 பேர் கொண்ட மர்ம கும்பல் அடுத்தடுத்து தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அப்பகுதியில் உள்ள நாடக மேடையில் வண்ணத்தான் தெருவைச் சேர்ந்த ராஜேந்திரன் (36) தூங்கிக் கொண்டிருந்தபோது அங்கு வந்த மர்ம நபர்கள் அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. மேலும், அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார்களின் கண்ணாடிகளையும் அந்த கும்பல் உடைத்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, இறப்பு நிகழ்ச்சிக்காக அப்பகுதியில் இருந்த சின்னசாமி (65), மர்ம நபர்களை பார்த்து யார் என கேட்டதாகவும், அவரையும் அந்த கும்பல் அரிவாளால் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
பின்னர் அங்கிருந்து சென்ற மர்ம கும்பல், குறிச்சி அருகே வீட்டின் அருகில் தூங்கிக் கொண்டிருந்த பூமி (55) என்பவரையும் தலையில் வெட்டியதாக கூறப்படுகிறது. தாக்குதலில் இருந்து தப்பி வீட்டிற்குள் சென்ற அவரை மர்ம நபர்கள் பின்தொடர்ந்து சென்றதாகவும், அங்கிருந்த பெண்களை மிரட்டி விளக்குகளை போடச் செய்ததுடன், பீரோ உள்ளிட்ட பொருட்களையும் அரிவாளால் தாக்கி சேதப்படுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் காயமடைந்த ராஜேந்திரனுக்கு முதற்கட்டமாக மானாமதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இதனிடையே, சம்பவம் குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்களிடம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் கண்ணீருடன் நடந்த சம்பவத்தை எடுத்துக்கூறி, தங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது.
அப்போது அங்கு வந்த இளையான்குடி காவல் ஆய்வாளர் துரைராஜ், செய்தியாளர்கள் வீடியோ பதிவு செய்வதை தடுக்க முயன்றதாகவும், வீடியோ எடுக்கக்கூடாது என்றும் மீறினால் வழக்குப்பதிவு செய்வேன் என எச்சரித்ததாகவும் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்கள் தங்களது குறைகளை செய்தியாளர்களிடம் தெரிவித்துக் கொண்டிருந்த நிலையில், அதனை பதிவு செய்ததற்காகவே காவல் ஆய்வாளர் இவ்வாறு எச்சரித்ததாக பத்திரிகையாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பத்திரிகையாளர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




