சென்னை அம்பத்தூர் மேனாம்பேடு இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த வைதேகி (34), கடந்த சில தினங்களுக்கு முன்பு மேனாம்பேடு பகுதியில் பலத்த வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற புதூர் போலீசார், உடலை கைப்பற்றி விசாரணையை தொடங்கினர்.
முதற்கட்ட விசாரணையில், ஆட்டோவில் வந்த மர்ம கும்பல் ஒன்று வைதேகியை துரத்திச் சென்று கொடூரமாக வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பியதாக அப்பகுதியில் தகவல் பரவியது. இதனால் அப்பகுதியில் பரபரப்பும், பொதுமக்களிடையே அச்சமும் ஏற்பட்டது.
இந்த கொலை வழக்கில் உண்மையை கண்டறிய தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டது. சம்பவம் நடந்த பகுதியில் பதிவான சிசிடிவி காட்சிகள் மற்றும் சந்தேகத்திற்கிடமான ஆட்டோவின் பதிவு எண்ணை வைத்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்போது, வழக்கில் எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டது.
வைதேகியை மர்ம கும்பல் கொலை செய்யவில்லை என்பதும், அவரது கணவரான ஆட்டோ ஓட்டுநர் சின்னா (36) என்பவரே கொலை செய்திருப்பதும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.
மனைவியின் நடத்தையில் சின்னாவுக்கு சந்தேகம் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும், வைதேகி வேறு ஒருவருடன் தொடர்பில் இருப்பதாக சந்தேகமடைந்த சின்னா, இதுதொடர்பாக அவரிடம் அடிக்கடி தகராறு செய்து வந்ததாக தெரிகிறது. சம்பவத்தன்று மனைவியை ஆட்டோவில் அழைத்துச் சென்றபோது இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த சின்னா, மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து வைதேகியின் கழுத்து, மார்பு மற்றும் வயிற்றுப் பகுதியில் சரமாரியாக தாக்கி கொலை செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். பின்னர், மர்ம கும்பல் கொலை செய்தது போல் சம்பவத்தை சித்தரித்துவிட்டு சின்னா தனது வீட்டிற்கு சென்றுள்ளார்.
ஆனால், சிசிடிவி காட்சிகள் மற்றும் போலீசாரின் தீவிர விசாரணையால் அவரது திட்டம் முறியடிக்கப்பட்டது. சம்பவம் நடைபெற்ற சில மணி நேரங்களிலேயே சின்னாவை போலீசார் கைது செய்தனர். தற்போது அவரிடம் தொடர்ந்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.




