தமிழக சட்டமன்ற பேரவையில் தவெக அரசின் முதல் நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவை மீதான பொது விவாதம் நடைபெற்று வருகிறது. கூட்டத்தொடரின் 7-வது நாளான இன்று (12-08-2026) நிதிநிலை மற்றும் வேளாண் அறிக்கை குறித்து உறுப்பினர்கள் விவாதித்தனர்.
இந்த நிலையில், தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிராக முதலமைச்சர் விஜய் சட்டமன்றத்தில் தனித் தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தார். தீர்மானம் மீது உறுப்பினர்கள் தங்களது கருத்துகளை முன்வைத்ததைத் தொடர்ந்து, குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இதில் திமுக, காங்கிரஸ், விசிக, ஐயூஎம்எல் உள்ளிட்ட கட்சிகள் தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்தன. அதேவேளையில், அதிமுக, பாஜக மற்றும் பாமக ஆகிய கட்சிகள் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தன. இருப்பினும், தீர்மானத்திற்கு ஆதரவாக பெரும்பான்மை இருந்ததால், அது நிறைவேற்றப்பட்டதாக சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது.
முன்னதாக தீர்மானத்தின் மீது பேசிய பொதுப்பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, மக்கள் தொகையை அடிப்படையாகக் கொண்டு நாடாளுமன்ற தொகுதிகளை மறுவரையறை செய்வதால் தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் பாதிக்கப்படும் என தெரிவித்தார். தமிழ்நாட்டின் உரிமைகள் மற்றும் அதிகாரத்தை பாதுகாப்பதுடன், இந்திய ஒருமைப்பாட்டை நிலைநிறுத்தும் நோக்கத்திலேயே இந்த தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
மேலும், பொருளாதாரத்தில் முன்னணி மாநிலமாக விளங்கும் தமிழ்நாட்டின் குரல் நாடாளுமன்றத்தில் உரிய அளவில் ஒலிக்க வேண்டும் என்றும், மக்கள் தொகை அடிப்படையிலான பிரதிநிதித்துவ முறையில் ஏற்படும் மாற்றங்கள் மாநிலங்களின் அரசியல் அதிகாரத்தை பாதிக்கக்கூடாது என்றும் ஆதவ் அர்ஜுனா வலியுறுத்தினார்.
இந்த தீர்மானம் எந்த ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கும் எதிரானது அல்ல என்றும், மாநில சுயாட்சி மற்றும் இந்திய ஒருமைப்பாட்டை பாதுகாப்பதற்கான நடவடிக்கை என்றும் அவர் குறிப்பிட்டார். பெரியார், அறிஞர் அண்ணா மற்றும் அம்பேத்கர் ஆகியோர் மாநில உரிமைகள் மற்றும் நாட்டின் நலன் குறித்து சிந்தித்ததை சுட்டிக்காட்டிய அவர், இந்த விவகாரத்தில் அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.




