Oplus_131072
கோடை காலத்தின் உச்சக்கட்டமாக கருதப்படும் கத்திரி வெயில் நாளை முதல் தொடங்குகிறது.
தமிழகத்தில் கோடை காலம் தொடங்கியது முதலே வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. இந்த ஆண்டும் கத்திரி வெயில் மிகவும் உக்கிரமாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அக்னி நட்சத்திரம் :
இந்த ஆண்டின் அக்னி நட்சத்திர காலம் எனப்படும் கத்திரி வெயில் மே 4ம் தேதி தொடங்கி மே 28ம் தேதி வரை சுட்டெரிக்கும். இந்த நாட்களில் சூரியனின் தாக்கம் நேரடியாக பூமியின் மேல் இருப்பதால் வெப்பம் கடுமையாக இருக்கும் என வானியல் ஆய்வாளர்களும், ஜோதிட நம்பிக்கையுள்ளவர்களும் தெரிவித்துள்ளனர். வடகிழக்குப் பருவமழைக் காலத்திற்கும், தென்மேற்கு பருவமழைக் காலத்திற்கும் இடைப்பட்ட காலமாக கத்திரி வெயில் உள்ளது.
அக்னி நட்சத்திர காலம் வாட்டி வதைப்பது ஏன்?
அக்னி தேவன் தீராத வயிற்றுப் பசியால் அவஸ்தைப்பட்டுக்கொண்டிருந்தார். இவருக்கு ஏற்பட்ட பசிக்குக் காரணம் தெரியாமல் தேவர்கள் திண்டாடினார்கள். இறுதியாக சுவேதகி என்ற மன்னன் 12 ஆண்டுகள் நடத்திய யாகத்தில் இட்டுக்கொண்டிருந்த நெய்தான் அக்னி தேவனின் வயிற்றில் பசியை உண்டாக்கிவிட்டது என்றும் அறிந்தனர்.
அக்னி தேவனின் கோரமான பசி தீர வேண்டுமானால் ஒரு அடர்ந்த காட்டை விழுங்கியே ஆக வேண்டும். இதற்காக அக்னி தேவன், காண்டவ வனத்தை தேர்ந்தெடுத்தார். அங்கு வாழ்ந்த உயிரினங்கள் அனைத்தும் வருணனிடம் முறையிட்டன. ‘அனைவரையும் காப்பாற்றுவதாக” வருணன் உறுதிமொழி அளித்தார்.
இதனையறிந்த அக்னி தேவன் கிருஷ்ணரிடம் சென்று ‘காண்டவ வனத்தை அழிக்க முடியாமல் வருணன் கனமழை பெய்விக்கிறார்” என முறையிட்டார். உடனே கிருஷ்ணன் அர்ச்சுனனைப் பார்த்தார். பார்வையாலேயே புரிந்துகொண்ட அர்ச்சுனன், அம்புகளை சரமாரியாக எய்து காண்டவ வனத்தின் மீது கூடுபோல் கட்டினான். உடனே அக்னி தேவன் வனத்தை எரிக்கத் தொடங்கினான். அதன்படி காண்டவ வனம் எரிக்கப்பட்ட நாட்களைத்தான் அக்னி நட்சத்திரம் என்றும் கத்திரி வெயில் என்றும் கூறுகின்றனர்.
அக்னி நட்சத்திர காலத்தில் செய்ய வேண்டியவை :
இந்த காலகட்டத்தில் சுபகாரியங்கள் நடத்தக் கூடாது, வேலைப்பளு இருக்கக்கூடாது என முன்னோர்கள் அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. கத்திரி வெயிலில் அலைந்தால் உடல் சூடாகி பாதிப்பு ஏற்படும் என்ற அறிவியல் உண்மை ஒளிந்திருக்கத்தான் செய்கிறது. அக்னி நட்சத்திர காலத்தில நம் உடல் பாதிக்கப்படாமல் இருக்க குளிர்ச்சி தரும் உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.




