புத்தர் தன்னுடைய சீடர்களைப் பார்த்து கேட்ட கேள்வி..!! ஒரு மனிதனின் ஆயுள் எவ்வளவு காலம்?..

புத்தர் தன்னுடைய சீடர்களைப் பார்த்து ஒரு வினாவினை எழுப்பினார். ‘ஒரு மனிதனின் ஆயுள் எவ்வளவு காலம்…?’.

அனைவருக்குமே விடை தெரியும் என்பதால், கூட்டத்தின் நடுவில் இருந்து வேகமாக எழுந்த ஒரு சீடர் ‘நூறு ஆண்டுகள்’ என்றார்…

புத்தரின் முகத்தில் புன்னகை. அதே புன்னகையுடன், ‘தவறு’ என்றார்…

சீடர்கள் அனைவரும் திகைத்தனர். ‘ஒரு மனிதனின் ஆயுள் காலம் நூறு ஆண்டுகள் இல்லையா…?. அப்படியானால் எவ்வளவு காலமாக இருக்கும். நூறு ஆண்டுகளுக்கு மேல் மனிதன் வாழ்வது என்பது அத்தி பூத்தாற் போன்றதுதான்…

ஆகையால்!, ஆண்டுகள் குறைவாக இருக்கவே வாய்ப்புள்ளது என்று கருதினர் சீடர்கள்…

உடனே ஒரு சீடர் எழுந்து, ‘எழுபது ஆண்டுகள்’ என்றார்…

‘இதுவும் தவறு’ என்றது புத்தரின் மென்மையான குரல்…

‘அறுபது ஆண்டுகள்’ என்றார் மற்றொரு சீடர்…

‘இது கூட தவறுதான்’ என்றார் புத்தர்…

இவை அனைத்தும் அதிக காலம் போல என்று எண்ணிய மற்றொரு சீடர் ‘ஐம்பது ஆண்டுகள்’ என்று கூறிவிட்டு, புத்தரின் பதிலை எதிர்பார்த்து அமைதியாக நின்றிருந்தார்…

புத்தரின் வார்த்தை அந்தச் சீடரையும் வருத்தம் கொள்ள செய்தது…

ஆம்..!, அந்தப் விடையும் தவறானது என்று கூறி விட்டார் புத்தர்…

சீடர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது…

‘இதென்ன வியப்பாக இருக்கிறது!. ஒரு மனிதனால் ஐம்பது ஆண்டுகள் கூடவா உயிர்வாழ முடியாது…?’ என்று குழம்பிப் போனார்கள்.

சற்று நேரம் தன்னுடைய சீடர்களையே பார்த்துக் கொண்டு இருந்தார் புத்தர். சரியான விடையைக் கூற முடியாமல் சீடர்கள் வருந்துவதை அவர்களின் முகமே காட்டிக் கொடுத்தது…

தன்னுடைய சீடர்களின் மன வருத்தத்தை காண விரும்பாத புத்தர்,..

‘ஒரு மனிதனின் ஆயுள் ஒரு “மூச்சு விடும் நேரம்”…!’ என்றார்.

சீடர்கள் அனைவருக்கும் வியப்பு. அந்த வியப்பு மாறாமலேயே, ‘மூச்சு விடும் நேரம், கணப் பொழுதுதானே!’ என்றனர்…

‘உண்மைதான். மூச்சு விடும் நேரம் கணப்பொழுதுதான். ஆனால்!, வாழ்வு என்பது மூச்சு விடுவதில்தான் இருக்கிறது…

எனவே!, ஒவ்வொரு கணமாக நாம் வாழ வேண்டும். மனிதர்கள் பலர் கடந்த கால மகிழ்ச்சியிலும், இன்னும் பலர் எதிர்காலத்தைப் பற்றிய அச்சத்திலும், கவலையிலும்தான் வாழ்கிறார்கள்…

நேற்று என்பது முடிந்து போனது. அது இறந்து போன காலம்…

அதே போல நாளை என்பது யாரும் அறிந்து கொள்ள முடியாத எதிர்காலம். எனவே அவற்றில் நேரத்தை செலவு இடுவது மடமை..

அந்த வகையில் நிகழ்காலம் மட்டுமே நம்முடைய ஆளுகைக்கு உட்பட்டது. அதை ஒவ்வொரு கணமாக முழுமையாக வாழ வேண்டும்’ என்றார் புத்தர்…

Read Previous

8-ம் வகுப்பு தேர்ச்சி போதும்..!! மாவட்ட சுகாதார சங்கத்தில் காலிப்பணியிடங்கள்..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

Read Next

வீட்டின் பூஜை அறை பற்றிய முக்கியக் குறிப்புகள்..!! கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular