மனிதர்களை விடவும் இந்தத் தீவுகளில் பூனைகள் அதிகம்… ஏன் தெரியுமா..??

Oplus_131072

பூனைகள் என்றால் யாருக்குத்தான் பிரியம் இருக்காது? அதிலும், ஜப்பானியர்களுக்குப் பூனை வளர்க்கும் ஆர்வம் கொஞ்சம் அதிகம். பூனை முகத்தில் விழித்தால் நல்லது என்ற நம்பிக்கையும் அவர்களிடையே இருந்துவருகிறது. ஆனால், ஜப்பானில் உள்ள தீவுகளில் மனிதர்களைவிட அதிகமான பூனைகள் வசித்துக் கொண்டிருக்கின்றன. பசிபிக் கடலில், தெற்கு ஜப்பானை ஒட்டி, 12-க்கும் மேற்பட்ட தீவுகள் உள்ளன. இவற்றை, பொதுவாக ‘பூனை தீவுகள்’ என்றும் அழைக்கின்றனர். இந்த இரண்டு தீவுகளில் அதிகமான பூனைகள் காணப்படுகின்றன. ஒன்றின் பெயர் டாஸிரொஜிமா (Tashirojima), இரண்டாவது தீவின் பெயர், ஓஷிமா (Aoshima). இந்த இரண்டு தீவுகளிலும் அதிகமான எண்ணிக்கையில் இருந்தாலும், அவை வளர்க்கப்பட்டதற்கான காரணங்கள் வெவ்வேறானவை.

இந்தத் தீவுகளுக்கு படகில் சென்றால், கரையிலேயே வரவேற்கும் வரவேற்பாளர்கள், பூனைகள்தான். அந்த அளவிற்குப் பூனைகள் அடர்த்தி அதிகம். இந்தத் தீவுகளை பார்க்கும்போது மனிதர்கள் பூனைகளை வளர்க்கிறார்களா அல்லது பூனைகள் மனிதர்களை வளர்க்கின்றனவா என்ற எண்ணம் தோன்றும். அந்த அளவிற்குத் திரும்பிய பக்கம் எல்லாம் பூனைகள் நடைபயில்கின்றன.

இந்த டாஸிரொஜிமா தீவு முழுதும் ஒருகாலத்தில் பட்டு உற்பத்தித் தொழில் நன்றாக நடைபெற்றது. பட்டுத் தயாரிப்புக்கு முக்கிய எதிரி எலிகள்தான். அந்த எலிகளை அழிக்கத்தான், பூனைகளை மக்கள் அதிகமாக வளர்த்தனர். ஆனால், நாளடைவில் பட்டு தயாரிப்பு நின்றுபோனதால், அங்கு வசித்த மக்கள் அதிகமான அளவில் ஜப்பான் நகரங்களுக்குக் குடிபெயர்ந்துவிட்டனர். இப்போது டாஸிரொஜிமா தீவில் மீனவர்கள் மட்டும்தான் வசித்துவருகின்றனர். 1945-ம் ஆண்டு சுமார் 900 பேர் இங்கு வசித்தனர். பெரும்பாலானோர் தொழில் தேடி நகரங்களுக்குச் சென்றுவிட, கடைகள், வர்த்தக நிறுவனங்கள் எதுவும் இல்லாத அந்தத் தீவில் இப்போது 100-க்கும் குறைவானவர்களே இருக்கின்றனர்.

ஒஷிமா தீவில், 22 பேர் மட்டும் மீதமிருக்கின்றனர். இங்குள்ள பூனைகளின் எண்ணிக்கை 120 ஆகும். மீனவர்களின் படகுகளை சேதமாக்கும் எலிகளின் தொல்லையிலிருந்து தப்புவதற்காகப் பூனைகள் வளர்க்கப்பட்டு வந்தன. இப்போது அதிகமான தொழில்வாய்ப்புகள் இல்லாத காரணத்தால் அதிகமான மக்கள் வெளியேறிவிட்டனர். சராசரியாக இந்த தீவில் ஒரு நபருக்குப் 6 பூனைகள் என்ற விகிதத்தில் காணப்படுகின்றன.

நம் நாட்டில், பூனை குறுக்கே போனால், தடையாக நினைப்பர். இந்த தீவுகளில் மக்கள் பூனை குறுக்கே வந்தால்தான் தங்களுக்கு அதிகமான பணம் கிடைக்கும், அதிர்ஷ்டம் தேடி வரும் என நம்புகின்றனர். இதனால் பூனையை யாரும் தொந்தரவு செய்வதில்லை. பூனைகளுக்கு உணவளித்தும் வருகின்றனர். அதோடு ஒஷிமா தீவில் பூனைக்கென கோயில் (Shrine) ஒன்று இருக்கிறது. ஒரு பூனையின் மீது பாறை விழுந்து அந்த பூனை இறந்துவிட்டது. அதனால் அதன் நினைவாக ஒரு கோயிலை கட்டிவிட்டார்கள், அந்த தீவு மக்கள். இந்தக் கோயில் சுற்றுலாப் பயணிகள் மத்தியில் ஆச்சர்யத்தைக் கிளப்புவதாக இருக்கிறது. இதுதவிர, ஆங்காங்கே பூனைகள் வடிவ வீடுகளும் கட்டப்பட்டுள்ளன.

பூனை வடிவமுடைய கற்கள் ஆங்காங்கே நடப்பட்டுள்ளன. பூனைகளால் இந்த இரண்டு தீவுகளும் மிகவும் பிரபலமாகி விட்டன. பூனைப் பிரியர்கள் அதிகமானோர், இங்குச் சுற்றுலா வருகின்றனர். ஜப்பான் நாட்டின் தலைநகரான, டோக்கியோ நகரிலிருந்து 120 கி.மீ. தொலைவில் இந்தத் தீவுகள் அமைந்துள்ளன. இந்த இரண்டு தீவுகளிலும், சுற்றுலாப் பயணிகள் நாய்களைக் கொண்டு வர தடைவிதிக்கப்பட்டுள்ளது. நாய்கள் வந்தால் பூனைகளை பிடித்துத் தின்றுவிடும் என்பதுதான் காரணம். இந்த தீவுகளில் பெரும்பாலானோர் வயதானவர்களாகவே இருக்கின்றனர். அதனால் ‘இறுதியாகி வரும் கிராமம்’ (terminal village) என்ற பெயரையும் பெற்றுள்ளது.

பொழுதுபோக்கிற்காக வரும் சுற்றுலாப்பயணிகள் அந்தப் பூனைகளுக்கு உணவளித்து மகிழ்கின்றனர். சில நேரங்களில் காட்டுப் பூனைகள் சுற்றுலாப் பயணிகளிடம் இருந்து உணவைப் பறித்து உண்டுவிடுகின்றன. இந்தப் பூனைகளை காண அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் ஆர்வம் காட்டுகின்றனர். பூனைகளை மையப்படுத்தி இந்த தீவில் திரைப்படங்களும் படமாக்கப்பட்டுள்ளன. இந்த தீவு, தற்போது ஜப்பானிய மக்களால் ‘பூனைகள் தீவு’ என்றும் அழைக்கப்படுகிறது. இந்த இரண்டு தீவுகளின் மொத்த நீளம் 9 கி.மீ. இந்தப் பூனைகளுக்கு குடும்பக் கட்டுப்பாடு செய்துவிடலாம் எனப் பலர் யோசனை சொன்னாலும், அது இன்னமும் செயல்படுத்தப்படவில்லை. சொல்லப்போனால், பூனைகள்தான் சுற்றுலாப் பயணிகளை இங்கு அழைத்து வந்து கொண்டிருக்கின்றன. அதைப் பயன்படுத்தியே அங்கு இருக்கும் மக்கள் பொருட்களை விற்பனை செய்து வருகிறார்கள் என்பதே உண்மை. இப்போது இருக்கும் மக்களுக்குப் பின்னர் யார் அந்த பூனைகளைப் பார்த்துக் கொள்வது என்பது கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது. இதேபோல கிரீஸ், இத்தாலி போன்ற நாடுகளிலும் பூனைத் தீவுகள் இருக்கின்றன.

Read Previous

தன் ரத்தத்தையே எண்ணையாக ஊற்றி விளக்கேற்றிய சிவ பக்தன் – உண்மை சம்பவம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular