மாட்டுப்பெண் என்று மருமகளை அழைப்பதன் அர்த்தம் என்ன..??

Oplus_131072

மாட்டுப்பெண் என்று மருமகளை அழைப்பதன் அர்த்தம் என்ன?

அதென்ன.. மாட்டுப் பெண்?
நீர்ப்பாசன வசதி உள்ள இடங்களில் நடவு செய்வதற்காக, வயலில் ஒரு சிறு பகுதியில் நாற்று விடுவார்கள். குறிப்பிட்ட நாள்கள் சென்ற பிறகு அந்த நாற்றுகளைப் பறித்து, பக்குவப் படுத்தப்பட்ட வேறு வயல்களில் நடுவார்கள்.
நாற்றைப் பறித்து எடுத்துச் சென்ற பின்பு அந்த இடம் வெட்புலமாக (VACANT) இருக்கும் அல்லவா ? அந்த இடத்தைப் பக்குவப் படுத்திவிட்டு வேறு இடத்தில் விடப்பட்டிருக்கும் நாற்றைக் கொண்டு வந்து இங்கு நடுவார்கள். இது தான் வேளாண் பெருமக்கள் பின்பற்றும் நடைமுறை.
இங்கு என்ன நிகழ்கிறது ? ஒரு வயலில் வளர்ந்திருக்கும் நாற்றைக் கொண்டுபோய் இன்னொரு இடத்தில் நடுகிறார்கள். அங்கு அது செழித்து வளர்ந்து பலன் தருகிறது. வளர்வது ஓரிடம்; நெல்மணியாம் வித்துக்களை விளைவிப்பது இன்னோரிடம்.
நம் வீட்டில் பிறந்து வளரும் நமது பெண்ணும் “நாற்று”ப் போன்றவள். வளர்வது நம்வீட்டில்; வாழ்வதும் பிள்ளைகளைப் பெற்றுக் குலம் தழைக்கச் செய்வதும் இன்னொரு வீட்டில். அவள் வளர்வது ஓரிடம்; வாழ்வது இன்னோரிடம். நம் வீட்டு நாற்றினைப் பறித்து இன்னொரு வீட்டில் நடுகிறோம். நாற்று அங்கு தன் வாழ்க்கையைத் தொடர்கிறது.
“நாற்றுப் பெண்” என்ற சொல்லின் பெயர்க் காரணம் புரிகிறதா ? “நாற்றுப் பெண்” என்ற சொல் ”நாட்டுப் பெண்” ஆகி பலரது நாவிலும் பொருள் புரியாமலேயே இன்னும் புழங்கி வருவது விந்தையிலும் விந்தை !
“நாற்று” போன்ற பெண் “நாற்றி” எனப்பட்டாள். ”நாற்றி” என்பது திரிந்து “நாத்தி” ஆகிவிட்டது. “நாற்று அன்னார்” என்றால் நாற்று போன்றவள் என்று பொருள். நாற்று + அன்னார் = நாற்றன்னார் = நாற்றனார் = நாத்தனார் “நாத்தனார்” பெயர்க்காரணம் இப்பொழுது விளங்குகிறதா ?
நம் வீட்டில் விளக்கேற்றிய நமது பெண் திருமணமாகி இன்னொரு வீட்டுக்கு வாழச் சென்றுவிட்டாள். நம் வீட்டில் விளக்கேற்ற ஒரு மாற்றுப் பெண் வேண்டாவா ? நாற்றாகிச் சென்றுவிட்ட நமது வீட்டுப் பெண்ணுக்கு மாற்றாக வேறொரு ஊரில் பிறந்து வளர்ந்த ஒரு பெண்ணை நம் வீட்டுக்கு மருமகளாகக் கொண்டுவருவது தானே முறை.
“நாற்று”ப் பெண் விளக்கேற்றிய வீட்டில், அவளுக்கு “மாற்று”ப் பெண்ணாக மருமகள் வருகிறாள். இந்த மாற்றுப் பெண்ணைத் தான் பலரும் “மாட்டுப் பெண்” ஆக்கி விட்டார்கள் !
சிலர் பேச்சுத் தமிழை எழுத்திலும் கொண்டு வருகிறார்கள். அதை நியாயப்படுத்தவும் செய்கிறார்கள். இத்தகைய மொழிச் சிதைவை அனுமதித்தால், “நாட்டுப் பெண்”, “மாட்டுப்பெண்’ போன்ற பொருளற்ற சொற்கள் தமிழில் பல்கிப் பெருகிவிடும். தமிழ் ஆர்வலர்கள் புரிந்து கொள்வார்களாக.

Read Previous

மண்பாண்ட மகிமை..!! கண்டிப்பா இந்த பதிவை அனைவரும் படித்து தெரிந்து கொள்ளுங்கள்..!!

Read Next

விஜயா சொன்ன வார்த்தை, முத்து சொன்ன பதில், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular