ரஷ்ய மாடலும் நடிகையுமான இரினா ருடகோவா, மும்பை லோகந்த்வாலா சந்தையில் ரூ.60-க்கு விற்கப்பட்ட பானி பூரியின் விலை அதிகம் என முன்பு விமர்சித்திருந்தார்.
ஆனால், துபாய் விமான நிலையத்தில் 42 திர்ஹம்ஸ், இந்திய மதிப்பில் சுமார் ரூ.1,096-க்கு பானி பூரி விற்கப்படுவதைக் கண்டு தனது கருத்தை மாற்றிக்கொண்டுள்ளார். துபாய் விலையுடன் ஒப்பிடும்போது மும்பையின் பானி பூரி மிகவும் மலிவானது என்பதை உணர்ந்த அவர், மும்பையில் விலை அதிகம் எனக் கூறியது தவறு என்று நகைச்சுவையாக ஒப்புக்கொண்டதுடன், மீண்டும் மும்பைக்கே திரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் தனது கலைப் பயணத்தைத் தொடங்கிய இரினா, ‘ரியாலிட்டி கியூன்ஸ் ஆஃப் தி ஜங்கிள்’ நிகழ்ச்சியில் வெற்றி பெற்றதுடன், பிக்பாஸ் மராத்தி நிகழ்ச்சியிலும் பங்கேற்று பிரபலமானவர். மும்பை பானி பூரியின் சுவையை ஆரம்பம் முதலே ரசித்து வந்த இவரது இந்த சுவாரஸ்யமான ஒப்பீடு மற்றும் பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.




