சென்னையில் சாதிப் பெயர் கொண்ட 77 தெருக்கள்: பெயர் மாற்றும் பணி தீவிரம்..!!

 

தமிழ்நாட்டில் சாதிப் பாகுபாடுகளை அகற்றி சமூக நீதியை நிலைநாட்டும் முயற்சியாக, பொது உள்கட்டமைப்புகளில் உள்ள சாதிப் பெயர்களை நீக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்காக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் ‘அரசாணை 313’ வெளியிடப்பட்டு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டன. அதன்படி, கிராமங்கள், குடியிருப்புகள், சாலைகள், தெருக்கள் மற்றும் நீர்நிலைகளில் உள்ள பாகுபாட்டை வெளிப்படுத்தும் பெயர்களை அகற்றும் நடவடிக்கை தற்போது வேகம் பெற்றுள்ளது.

சென்னை மாநகராட்சி பகுதிகளில் சாதிப் பெயர் கொண்ட தெருக்களைக் கணக்கெடுக்கும் பணியும் தீவிரமடைந்துள்ளது. முதல் கட்ட ஆய்வில் கோடம்பாக்கம், வளசரவாக்கம், அடையாறு மண்டலங்களில் மட்டும் சுமார் 77 தெருப் பெயர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. மற்ற மண்டலங்களிலும் ஆய்வு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

அரசாணையின்படி, தெருப் பெயரில் சாதிப் பெயர் பின்னொட்டாக இருந்தால் அது மட்டும் நீக்கப்படும். முழுப் பெயரும் சாதியை மையமாகக் கொண்டிருந்தால், அந்தப் பெயர் முழுமையாக மாற்றப்படும். ‘ஜி.என்.செட்டி சாலை’ ஏற்கனவே ‘கோபதி நாராயணன் சாலை’ என மாற்றப்பட்டுள்ளது. மேற்கு மாம்பலத்தில் உள்ள சீனிவாச ஐயர் தெரு, பாலகிருஷ்ண நாயக்கன் தெரு ஆகியவையும் சுருக்கப்பட்டுள்ளன.

கெங்கு ரெட்டி சாலை, பிராமணர் தெரு, வன்னியர் தெரு, டாக்டர் நாயர் சாலை உள்ளிட்ட பல பெயர்களும் தற்போது ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கையை தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வரவேற்றுள்ளதுடன், பெயர் மாற்றத்தின்போது டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர், எம்.சிங்காரவேலர் போன்ற சமூக நீதித் தலைவர்களின் பெயர்களைச் சேர்க்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது.

 

Read Previous

ரூ.60 பானி பூரி விலை அதிகம் என விமர்சித்த ரஷ்ய நடிகை: துபாயில் ரூ.1,096 பார்த்து மாற்றிய கருத்து..!!

Read Next

பாஜகவில் இருந்து விலகுகிறாரா சரத்குமார்? வெளியான வதந்திகளுக்கு X பதிவு மூலம் முற்றுப்புள்ளி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular